Now Reading
லப்டப் திக் திக்!

லப்டப் திக் திக்!

“கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன்… சிகிச்சை அளிக்கிறேன்…. ஆலோசனைகள் அளிக்கிறேன்” என்றெல்லாம் ஏகப்பட்ட ‘திடீர்’ டாக்டர்கள் கிளம்பியுள்ளார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், யுடியூப் என சமூக வலைதளங்களில் வலம்வரும் இவ்வகை டாக்டர்களை நம்பி ஏமாறும் பொதுமக்கள் பணத்தோடு உயிரையும் இழந்துக் கொண்டிருக்கிறார்கள். போலி டாக்டர்களை கண்டுபிடிப்பது எப்படி?

கொரோனா சிகிச்சையில் போலி மருத்துவர்கள் பெருகியுள்ளதை அடுத்து, “மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் அக்குப்பஞ்சர் மருத்துவம் போன்ற பல்வேறு பெயர்களில் எவ்வித பதிவும் அங்கீகாரமும் இல்லாத போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவருகிறது. மருத்துவக் கல்வித் தகுதி, பதிவு எண் ஆகியவற்றினை உறுதிசெய்த பின்னரே சிகிச்சைபெற வேண்டும்” என்று எச்சரித்திருக்கிறது தமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ்வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குனரகம்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் (பல் மருத்துவம்) படித்த மருத்துவர்கள் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தில் வருகிறார்கள். சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி அண்ட் யோகா படித்த மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தில் வருகிறார்கள். இவர்கள்தான், அரசாங்கத்தால் பதிவு பெற்ற ஒரிஜினல் மருத்துவர்கள். இவர்களைத் தவிர, மற்ற மருத்துவர்கள் போலி மருத்துவர்கள்தான். பி.ஹெச்டி. எனப்படும் ஆராய்ச்சி செய்து பட்டம் வாங்கியவர்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக்கொள்கிறவர்கள்; ஆனால், இவர்கள் மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் அல்ல; முனைவர்கள்.

போலி டாக்டர்களை கண்டுபிடிப்பது எப்படி?

அரசு மருத்துவரும் பல போலி டாக்டர்களை கைது செய்ய வைத்தவருமான டாக்டர் சாமிநாதனிடம் பேசினோம். “டீசண்டாக ஆடை அணிந்து, நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி, ஸ்டெதஸ்கோப்பும் வைத்துக்கொண்டு டாக்டர் என மக்களை ஏமாற்றுபவர்கள் பெருகிவிட்டார்கள். இதை தடுக்க, அரசு சுகாதாரத்துறையும், அந்தந்தப் பகுதியில் இருக்கும் ஐ.எம்.ஏ எனப்படும் இந்திய மருத்துவச் சங்க மருத்துவர்களும், அவரவர்கள் பகுதிகளில் எத்தனை மருத்துவர்கள் அலோபதியில் இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

சில போலி மருத்துவர்கள் ‘மாற்று மருத்துவம்’ என்று கூறிக்கொள்கிறார்கள். இவர்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கொடுக்கலாம். புகார் உறுதியானால் போலி மருத்துவர்கள் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப் படுவார்கள்.

எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே பலர் டாக்டர் என்று போட்டுக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் பி.ஃபார்ம் (மருந்தாளுனர்) படித்து மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்களில் சிலரும் மருத்துவம் பார்க்கிறார்கள். இவர்கள் நோயாளிகளுக்கு அதிசீக்கிரத்தில் குணப்படுத்தி பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும் ஸ்டீராய்டு ஊசிகளைப் போட்டு விடுகிறார்கள். ஆனால், நோய் உள்ளே இருந்துகொண்டேதான் இருக்கும். மேலும், ஸ்டீராய்டு ஊசியானது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுவதோடு, கிட்னி ஃபெயிலியர் மற்றும் நீரிழிவு நோயையும் உண்டாக்கிவிடும்.

இதனால்தான், முறையாக படித்த மருத்துவர்களிடம் சென்று மருத்துவம் பார்க்க வெண்டும் என வலியுறுத்துகிறோம். உடல்நிலைக்குத் தகுந்தவாறு பக்க விளைவுகள் இல்லாத ஊசி மருந்துகளை அவர்களால்தான் கொடுக்க முடியும்ம்.

மெடிக்கல் ஷாப்களில் ஊசிபோட்டாலும் புகார் அளிக்கலாம். பரம்பரை வைத்தியர்களான ‘பி’ கிளாஸ் ப்ராக்டிஷனர்களும் போலி பரம்பரை வைத்தியர்களும்கூட இஷ்டத்துக்கு ஊசி, மருந்து கொடுக்கிறார்கள். ஒரு நோயாளிக்கு அலோபதி மருத்துவர்கள் மட்டும்தான் ஊசி போடவேண்டும்.

இந்திய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட ஐந்து துறை மருத்துவர்களும்கூட ஊசி போடக்கூடாது என சட்டமே உள்ளது” என்கிறார்.

தொடர்ந்து, “பொதுவாக ப்ரிஸ்கிரிப் ஷன் எனப்படும் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டில் பதிவு எண் போட்டிருக்கவேண்டும். அந்த எண்ணைத் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் வெப்சைட்டில் சென்று ‘டாக்டர்ஸ் சர்ச்’ என்பதில் போட்டு தேடினால் மருத்துவரின் பெயரோடு ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரும் புகைப்படமும் வந்துவிடும். மருத்துவர்களின் பதிவு எண் பலகையில்கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், மருந்துச் சீட்டில் இல்லாமல் இருந்தால், அதுவே தண்டனைக்குரியது.

ஒருவேளை, பதிவு எண் தெரியவில்லை என்றால் டாக்டரின் பெயரை பதிவு செய்தாலே அதே பெயரிலுள்ள பல டாக்டர்களின் பட்டியல் வரும். அதை வைத்து, பதிவு பெற்ற டாக்டர்தானா என்று கண்டுபிடிக்கலாம்.

போலி மருத்துவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்?

போலி டாக்டர்கள் பெரும்பாலும் செல்வாக்கை உருவாக்கிக்கொள்வார்கள். அதிலேயே, பலர் தப்பித்துவிடுறார்கள். ஆனால், நான் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டிப்புடன் இருந்ததால் யாரையும் விடவில்லை. இதுவரை, 18 போலி டாக்டர்களை ஆய்வு செய்து கைது செய்ய வைத்திருக்கிறேன்.

தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் உள்ளார்கள். இவர்கள், வருடத்திற்கு ஒருமுறை மாநாடு நடத்துவார்கள். சிலநேரம் முக்கிய பதவிகளில் இருப்பவர்களையும் அழைத்துவந்து உரையாட வைப்பார்கள். அதோடு, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுப்பார்கள்.

பணம் வருகிறது என்பதால் அரசியல்வாதிகள், இவர்கள் மீது கைவைக்க மாட்டார்கள். இவர்கள், நடத்தும் மாநாடுகளில் பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்வதால் மக்களும் நம்புகிறார்கள். இதுதான், போலி டாக்டர்களின் மூலதனம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது போலி டாக்டர் என உறுதியானால் கைது செய்ய முடிந்தது. அந்த துணிச்சல் இப்போதுள்ளவர்களுக்கு இல்லை. இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், பயப் படுவார்கள். ஏனென்றால், போலி டாக்டர்களிட மிருந்து மிரட்டல்கள் நிறைய வரும். எனக்கும் வந்திருக்கிறது. முதலில் தன்மையாக பேசுவார்கள், இரண்டாவது பணம் கொடுக்கப் பார்ப்பார்கள். மூன்றாவதுதான் மிரட்டல். எதிலும் பணியாமல் இருக்கவேண்டும்’ என்கிறார் டாக்டர் சாமிநாதன்.

இந்திய மருத்துவத்தில் போலிகளை கண்டுபிடிப்பது எப்படி?

சென்னை அரசு நேச்சுரோபதி (இயற்கை) மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணவாளனிடம் கேட்டோம். “ஐந்து வகையான இந்திய மருத்துவத்தில் எந்த மருத்துவரைப் பார்க்கச் சென்றாலும் அங்கு போர்டு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அதில், அவர் பெயர், படிப்பு, பதிவு எண் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அந்த மருத்துவர் மீது சந்தேகம் வந்தாலோ, பதிவு எண் போட்டிருக்கவில்லை என்றாலோ தமிழ்நாடு சித்தா மெடிக்கல் கவுன்சில் வெப்சைட்டில், அந்தப் பதிவு எண்ணை போட்டு சோதனை செய்துகொள்ளலாம்.

நிறைய பேர் மருத்துவ டிகிரியை மாற்றிப் போடுகிறார்கள். இன்னும் சிலர் புது டிகிரி போட்டுக்கொள்கிறார்கள். இப்படி குழப்பம் வந்தால் சித்தா மெடிக்கல் கவுன்சிலுக்கு போன் செய்து ரெஜிஸ்டாரிடமே கேட்டுக் கொள்ளலாம். இந்திய மருத்துவத்தில் போலி டாக்டரை எப்படி கண்டுபிடிப்பதென்றால் ’நான் எல்லா வியாதியையும் 100 சதவீதம் குணப்படுத்திவிடுவேன்.

என்னிடம் வாருங்கள்’ என்று சொல்பவர்கள் பெரும்பாலும் போலியாகத்தான் இருப்பார்கள்” என்று சுட்டிக்காட்டுகிறார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநரும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்த மருத்துவக் கல்லூரியின் முதல்வருமான டாக்டர் பார்த்திபனிடம் பேசினோம். “இந்திய மருத்துவத்தில் பலர் பரம்பரைப் பரம்பரையாக வருகிறோம் என்று புற்றீசல் போல கிளம்பிக் கொண்டிருப்பதுதான், போலிகள் அதிகரிக்கக் காரணம். இவர்கள், சில வட்டாட்சியரிடம் சான்றிதழ் வாங்கி வைத்துக்கொண்டு பரம்பரை வைத்தியர் என்று சொல்லிக்கொள்வார்கள். வட்டாட்சியர் அப்படி வழங்கக்கூடாது.

See Also

தமிழக அரசு 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு யாருக்கும் பரம்பரை வைத்தியர் என்ற சான்றிதழ் கொடுப்பது கிடையாது. ஏனென்றால், 1965ஆம் ஆண்டிலேயே இந்திய மருத்துவத்திற்கென்று கல்லூரிகளும் படிப்புகளும் வந்துவிட்டன. ஐந்தரை வருட பட்டப்படிப்பு படித்தால் மட்டும்தான் மருத்துவர். பரம்பரை வைத்தியர் என்ற பெயர் வைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு மருந்துகள் குறித்தோ, எவ்வாறு / எவ்வளவு அளவில் கொடுக்க வேண்டும் என்பது குறித்த அடிப்படை புரிதல் இருக்காது.

ஏதோ ஒன்றிரண்டு மருந்தை தெரிந்து வைத்துக்கொண்டு, கொஞ்சநாள் வைத்தியரிடம் வேலை பார்த்துவிட்டு வந்து, நானும் மருத்துவர் என்று ஆரம்பித்துக் கொள்கிறார்கள். தமிழகத்தில் ‘பி’ கிளாஸ் பிராடிக்ஷனர் எனப்படும் பரம்பரை வைத்தியர்கள் 70 பேர்தான் இருக்கிறார்கள். அவர்கள், இப்போது பெரும்பாலும் செய்வதில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லோருக்கும் 80 வயதிற்கு மேல் ஆகிறது.

மருத்துவமனைகள் பதிவு மற்றும் ஒழுங்கு முறைச் சட்டத்தைக் கடந்த வருடம் கொண்டு வந்தது அரசு. அந்தச் சட்டத்தில் ஒரு மருத்துவமனை, மருத்துவர் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்று உள்ளது. இதை தவிர்த்து போலி மருத்துவர்களை தடைச் செய்யும் குழுவையும் அமைத்துள்ளோம். மேலும், போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க 2-டி பார்கோடு என்ற புதிய முறையை கொண்டு வந்துள்ளோம்.

ஒவ்வொரு மருத்துவரும் அவர் படித்த சான்றிதழை மருத்துவமனையில் தொங்கவிட வேண்டும். உங்கள் செல்ஃபோனை எடுத்துக் கொண்டு க்யூ ஆர் ஸ்கேனர் ஆப்ஷனில் சென்று 2-டி பார்கோடை ஸ்கேன் செய்தால் அவர் பதிவு செய்த மருத்துவர்தானா, அவர் குறித்த அனைத்து விவரங்களும் உண்மையா / போலியா என்று வந்துவிடும். போலிகள் என சந்தேகம் எழுந்தால் இந்திய மருத்துவத்துறைக்கு மக்களே புகார் அனுப்பினால். புகார் உறுதியானால் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருத்தணிகாச்சலத்தையும் அப்படித்தான் கைது செய்தோம்.

அதேபோல, போலி மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளை தயாரித்து கொடுக்கிறார்கள். அதுவும் தவறு. எல்லோராலும் மருந்து தயாரிக்க முடியாது. ஸ்டேட் ட்ரக் லைசென்சிங் அத்தாரிட்டியிடம் அனுமதி பெற்றுதான் தயாரிக்க முடியும். அதாவது ஜி.எம்.டி சான்றிதழ் பெற்றவர்தான் தயாரிக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் சர்க்கரை நோய்க்கு நாட்டு மருத்துவம் என்றுக்கூறி மருந்து வாங்கிக் குடித்தவர்கள் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட சம்பவத்தை தமிழகமே அறியும். அதுமட்டுமல்ல, கோவையைச் சேர்ந்த ஒருபெண் மரபுவழி மருத்துவத்தை பின்பற்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்து ரத்தப்போக்கு அதிகரித்து உயிரிழந்தார். இதற்கெல்லாம் காரணம், போலி மருத்துவர்கள் மட்டுமல்ல, இந்திய மருத்துவம் படித்த மருத்துவர்களும்தான்.

இவர்கள் பெரும்பாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராமத்தில் இரவு தங்குவது கிடையாது. தங்கினால்தான் போலி டாக்டரைகளை போய் மக்கள் பார்க்கமாட்டார்கள். ஆனால், இவர்களோ சிட்டியில் இருக்கும் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அதனால், மக்கள் போலி டாக்டரிடம் சென்றுவிடுகிறார்கள். போலி மருத்துவர்களை ஒழிப்பது என்பது இந்திய மருத்துவத்தில் இன்றியமையாதது. இதற்கு, சமூகமும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்” என்கிறார்.

கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெறலாமா?

“தமிழக அரசு சமீபத்தில் பேண்டமிக் ஆக்ட் கொண்டுவந்துள்ளது. சித்தா, ஆயுர்வேதா என்று இந்திய மருத்துவர்கள் இருந்தாலும் கொரோனாவுக்கு அலோபதி அரசு மருத்துவமனைகளில்தான் நோயாளிகள் செல்லவேண்டும். அதுவும், அங்கு பரிசோதித்து சித்த மருத்துவம் கொடுக்கலாம் என்றால்தான் நாங்களே சிகிச்சை அளிக்க முடியும். சித்த மருத்துவர்களே அங்கு சென்றுதான் பார்க்கவேண்டும். ஏனென்றால், கொரோனா நோயாளிகளுக்கு அவசரக் காலத்தில் வெண்டிலேட்டர் உதவி தேவைப்படும். ஆனால், சித்த மருத்துவத்தில் அப்படி செய்யமுடியாது என்பதால் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்கிறது அரசு” என்கிறார், டாக்டர் பார்த்திபன்.

– பூ.சர்பனா

What's Your Reaction?
Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top