Now Reading
மலைவாழ் மாணவர்களின் கல்வி விடியல்

மலைவாழ் மாணவர்களின் கல்வி விடியல்

டி. கலைவாணி, தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, சிந்தகவுண்டன்பாளையம், ஈரோடு மாவட்டம்

நான் பட்டப்படிப்பை முடித்ததும் குரூப் ஐஐ தேர்வில் வெற்றிபெற்று, வரதட்சணை ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பியாகத் தேர்வானேன். ஆனால், ஆசிரியப் பணியின் மீதான விருப்பத்தால், அதனை விட்டுவிட்டு 2000 ஆண்டில் பட்டதாரி ஆசிரியராகச் சேர்ந்தேன். பின்னர், முதுகலை பட்டதாரி ஆசிரியராக உயர்ந்தேன்.

ஆசிரியர் பணி அனுபவத்தில் மாணவர்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகள் நான் நடத்திய பாடத்தில் 100 சதவிகித தேர்ச்சிபெற்றது வாழ்வின் மகிழ்வான தருணம். பின்னர், ஈரோடு மாவட்டம், அந்தியூர் மலைப்பகுதியில் உள்ள தேவர்மலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இந்தப் பள்ளியில் நான் பணியாற்றிய காலம்தான் என் ஆசிரியப் பணியில் ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம்.

நகர்ப்புறங்களில் பணியாற்றிய எனக்கு இந்த மலைக்கிராம குழந்தைகளின் மீது இனம்புரியாத பாசம் ஏற்பட்டது. முதல் ஆண்டிலேயே 488 மதிப்பெண்கள் பெற்று மாணவன் சிவராஜ் பள்ளியில் முதலிடம் பிடித்தான். மேலும், தேர்வு எழுதிய 72 மாணவர்களில் 24 பேர் நானூறுக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றார்கள். எங்கள் ஆசிரிய நண்பர்களின் உழைப்பும், மாணவச் செல்வங்களின் இடைவிடாத முயற்சியுமே காரணம்.

இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, வேறு பள்ளிக்கு விருப்ப மாறுதல் பெற்றேன். ஆனால், மக்களோ மீண்டும் அப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வரவேண்டும் என கல்வி இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்தார்கள். அதே பள்ளிக்குத் திரும்பினேன். நம் மீது இவ்வளவு பாசமும் மதிப்பும் கொண்டவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற எண்ணம் மனதில் துளிர்த்தது.

இங்கு பணியாற்றிய நான்கு ஆண்டுகளும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தரமுடிந்தது. அடுத்து சிந்தகவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றேன். பள்ளியைவிட்டு வந்தாலும் மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி செய்வதைத் தொடர்ந்தேன். ஒவ்வொரு ஞாயிறும் பர்கூர் மலையில் உள்ள தாமரைக்கரை பழங்குடி மையத்திற்குச் சென்று ஆங்கிலம் மற்றும் கணித வகுப்புகள் எடுத்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

இந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் நாகரிக வாழ்வின் எந்த சிறு அடிச்சுவடும், வாழ்வாதாரமும் இல்லாத நிலையில் இருந்தார்கள். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி செல்லாதவர்களையும், கல்லூரிப் படிப்பை முடித்தும் வேலை கிடைக்காதவர்களையும் பார்க்கமுடிந்தது. என்ன செய்வது என புரியாமல் தவித்தனர். எனவே, அவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள இலவசப் பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்தோம். நல்ல உள்ளங்களின் துணையுடன் தேவையான புத்தகங்களை இலவசமாக வழங்குகிறோம்.

என் கணவரும் ஆசிரியர் என்பதால், ஒவ்வொரு வாரமும் என்னுடன் வந்து மலைவாழ் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறார். இந்த சேவையில், மேலும் சில ஆசிரிய நண்பர்கள் எங்களுடன் கைகோர்த்துள்ளனர். இதன் மூலம் மலைகிராம பழங்குடியினக் குழந்தைகளின் வாழ்வில் ஒரு சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

See Also

கல்விச் சேவையைப் பாராட்டி ஈரோடு, திருப்பூர், மதுரையைச் சேர்ந்த ஜேசிஐ, யங் இந்தியன்ஸ், நீதியரசர் சிவராஜ் பாட்டில் அறக்கட்டளை, ரோட்டரி நெக்ஸ்ட் ஜெனரேஷன் போன்ற அமைப்புகள் எனக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கியதை மறக்கமுடியாது. இந்த விருதுகளும் பாராட்டுகளும் பழங்குடி மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு விடியலை ஏற்படுத்துவதற்கான உந்துதலைத் தருகின்றன.

தொகுப்பு: சுந்தரபுத்தன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top