Now Reading
வாவ் ஐந்தறிவு – 43

வாவ் ஐந்தறிவு – 43

கத்தியின்றி ஒருயுத்தம்

பெயர்தான் வெட்டுக்கிளியே தவிர, இது ஒரு சாதுவான பூச்சியினம். ஆனால் ஏதாவது ஒரு காலகட்டத்தில், மனிதனுக்கு ஒரு மோசமான எதிரியாக மாறி, அவனுக்கு உணவே இல்லாதபடி செய்யக்கூடிய அபாயகரமான உயிரினம். ஒரு வெட்டுக்கிளியானது, ஒவ்வொரு நாளும் தனது எடையைப்போல, இருமடங்கு உணவை சாப்பிடும் திறன் கொண்டது.

அதிலும், இந்த வெட்டுக்கிளிகளில் ஒரு வகையான லோகஸ்ட்டுகள் (LOCUST) பெரும் கூட்டமாகப் பறந்து சென்று, ஒரு வயலில் அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்களையோ, ஒரு காட்டின் பசுமையான பகுதியையோ ஒரு சில மணித்துளிகளில் அரைத்துத் தின்று பொட்டல்வெளியாக மாற்றிவிடும். மேலும், இது சாப்பிடும் உணவுக்கு ஏற்ப, தன்னுடைய உடல் நிறத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை வெட்டுக்கிளிகள் முதன் முதலாக, 1880-ஆம் ஆண்டு, ரஷ்யாவில் ஒரு போர்ப்படை போல் செயல்பட்டு, மக்களை அதிரவைத்தது. வெட்டுக்கிளிகளுக்குப் பயந்து போன மக்கள், பல நாட்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு 1955-ஆம் ஆண்டு, மொராக்கோ நாட்டிற்குப் பறந்துவந்த, இந்த வகை வெட்டுக்கிளிக் கூட்டத்தின் அகலம் 20 கிலோ மீட்டர் வரை பரவி, போர்க்கால நடவடிக்கை போல், ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் இருந்த சகலவிதமான பயிர்களையும் செடி, கொடிகளையும் அழித்தது.

பறவைகள், எலிகள், ஓணான்கள், பச்சோந்திகள், பாம்புகள், கீரிகள் போன்ற உயிரினங்களின் ‘டின்னர்’ லிஸ்டில், வெட்டுக்கிளிகள் பிரதான, பிரியமான உணவாக இருந்தபோதும், வெட்டுக்கிளிகளின் கொட்டம் அடங்கியபாடில்லை.

ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இந்த வெட்டுக்கிளிகள் ‘கேலிபேரா’ (CAELIFERA) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இது ‘ஆர்த்தோபெட்ரா’ (ORTHOPTERA) என்ற இனத்தைச் சேர்ந்தது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு பகுதிகளில் வெட்டுக்கிளி இனங்களைக் காணலாம்.

எல்லா வெட்டுக்கிளிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒரு சில வெட்டுக்கிளிகள் ஒரு சிறிய துள்ளல், குதித்தலோடு தன்னுடைய இயக்கத்தை முடித்துக்கொள்ளும். ஆனால், அவற்றில் சில புறா, கழுகைப் போலவே விண்ணில் பறந்து, கண்டம் விட்டு கண்டம் கடப்பவை. பாலைவனங்களில் வசிப்பவை.

வெட்டுக்கிளிகள் அவற்றின் உடல் பண்புகளுடன் தொடங்கி கிளிப்பச்சை, அடர் பச்சை, பிரவுன், கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படும். அவை பெரிய பின்னங்கால்கள் மற்றும் இரண்டு சிறகுகள் கொண்டவை. பின் இறக்கைகள் பெரியவை. உணர் இழைகள் நீளமாகவும், மெலிதாகவும் இருக்கும். வெட்டுக்கிளிகளின் கண்கள் சற்று பெரியவை. சாம்பல், பழுப்பு, பச்சை நிறங்களோடு கூடிய கலவையாகக் காணப்படும்.

பொதுவாக பெண் வெட்டுக்கிளிகள், ஆண் வெட்டுக்கிளிகளை விட அளவில் பெரியவை. அவற்றின் அடிவயிற்றில் புள்ளிகள் காணப்படும். இந்தப் புள்ளிகளை வைத்து பெண் வெட்டுக்கிளிகளை எளிதில் இனம் பிரித்துவிடலாம். இனப்பெருக்கக் காலங்களில் பெண் வெட்டுக்கிளிகள் மணல் பரப்பில் முட்டைகள் இட்டு, மணலால் மறைத்து விடுகின்றன. போதுமான வெப்பம் கிடைத்து, முட்டைகளில் இருந்து நிம்ஃப் (NYMPH) களாக வெளியேறி, அடுத்த சில நாட்களுக்குள் முழு வளர்ச்சி அடைந்த வெட்டுக்கிளிகளாக மாறுகின்றன. ஒவ்வொரு வெட்டுக்கிளியும் 0.6 இன்ச் முதல் 3 இன்ச் வரை வளரக்கூடியவை. இதன் ஆயுட்காலம் ஆறு மாதங்கள்.

பாலைவனங்களில் மழை பெய்தால் மட்டுமே, வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன. பாலைவனத்தில் மழை பெய்த பிறகு, ஈரப்பதமுள்ள மணல்களின் அடியில், மில்லியன் கணக்கில் முட்டைகள் இட்டு, அவை வெட்டுக்கிளிகளாக உருமாறியதும், பாலைவனத்தில் உள்ள காய்ந்த புற்களையும், முட்செடிகளையும் இரையாக எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன.
சில சமயங்களில், இனப்பெருக்க எண்ணிக்கை அதிகமாகும்போது, பாலை வனத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. அந்த சமயத்தில் வெட்டுக்கிளிகள் அகோரப் பசியுடன், பாலைவனத்தை ஒட்டியுள்ள கிராமங்களையும், நகரங்களையும் நோக்கி படையெடுக்கின்றன.

பாலைவன வெட்டுக்கிளிகள்

நாம் இங்கே தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும் பார்க்கின்ற வெட்டுக்கிளிகள் 10 அடி உயரத்துக்கு மேல் பறப்பது அரிது. ரெண்டு தாவல்களோடு வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்துவிடும். ஆனால், பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாய் கழுகு, காகங்கள் போல் பறக்கக்கூடியவை. ஒரு பறவையின் ஆற்றலோடு அவை அப்படி பறக்கக் காரணம் செரடோனின் (SEROTONIN) என்கிற ஒரு திரவம்தான். இந்த வெட்டுக்கிளிகள் உயர எழும்பிப் பறக்க ஆரம்பித்தவுடன், அவற்றின் பின்னங்கால்களில் உள்ள தொடைகள், ஒன்றுடன் ஒன்று உராய்வதன் மூலம் செரட்டோனின் திரவம் சுரக்க ஆரம்பிக்கின்றன.

இந்த திரவம் அதன் உடம்பில் உள்ள தசைகளையும், சிறகுகளையும் வலுப்படுத்துகின்றன. இந்த வலுவான ஆற்றல்தான் அவற்றை கண்டம் விட்டு கண்டம் பறக்கவைக்கின்றன. பாலைவனங்களில் வாழும் போது, தங்களை இரையாக்கிக் கொள்ள முயலும் பறவைகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உயிர் தப்பித்துக்கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனம் மிக்கது.

இந்த வெட்டுக்கிளிகள் வானத்தில் பறக்கும் போது எதிரிகளை பயமுறுத்துவதற்காக, நெருக்கமாய் ஒரு ராணுவப் படையைப்போல் செல்லும். இதை பார்க்கும் பறவைகள் பயந்துபோய், ஒதுங்கிவிடுகின்றன. காற்றின் வேகத்தைப் பொறுத்து, மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த வெட்டுக்கிளிகள், 200 கிலோ மீட்டர் தூரம் வரை களைப்பில்லாமல் பறப்பது பூச்சியியல் வல்லுநர்களை வியப்படைய வைத்துள்ளது. இவை, மனிதர்களைக் கண்டுகொள்வது இல்லை. பசுமையாய் இருக்கும் பயிர்கள் மற்றும் செடிகளை மட்டுமே குறி வைக்கும்.

முக்கிய வகைகள்

வெட்டுக்கிளிகளின் வகைகள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவையாக உள்ளன. அவற்றின் உணர் இழைகள் எனப்படும் ஆண்டனாவின் நீளத்திற்கு ஏற்ப இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று நீண்ட கொம்பு வெட்டுக்கிளிகள். இரண்டாவது குறுகிய கொம்பு வெட்டுக்கிளிகள். அதாவது LONG HORNED GRASSHOPPERS, SHORT HORNED GRASSHOPPERS. நீண்ட கொம்பு வெட்டுக்கிளிகளுக்கு புஷ் கிரிக்கெட் (BUSH CRICKET) என்று இன்னொரு பெயரும் உண்டு. இதில் மட்டும் 6 ஆயிரம் வகைகள் உள்ளன.

வெட்டுக்கிளிகளுக்கு இருக்கும் இரண்டு ஆன்டெனாக்கள், பகல் நேரத்தைக் காட்டிலும் இரவு வேளைகளில் மட்டுமே கூடுதல் விழிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும். எதிரிகளின் நடமாட்டம் இருக்கும் இடத்தையும் துல்லியமாகக் காட்டித் தந்துவிடுகின்றன. இந்த ‘புஷ் கிரிக்கெட்’ இன வெட்டுக்கிளிகள் அனைத்துமே கிட்டத்தட்ட பச்சை நிறத்தில் காணப்படுகின்றன.

மற்ற வெட்டுக்கிளிகளிடம் இல்லாத இன்னொரு சிறப்பான உறுப்பு இந்த இனத்திற்கு உண்டு.அந்த உறுப்பின் பெயர் டைம்பனம் (TYMPANUM). இது ஒரு கேட்கும் உறுப்பு. மனிதனுக்குக் காது இருப்பதுபோல், இந்த இன வெட்டுக்கிளிகளுக்கு இந்த உறுப்பு, அவற்றின் முன் கால்களில் அமைந்துள்ளது. இந்தக் குடும்பத்தின் ஆண் வெட்டுக்கிளிகள், இனப்பெருக்க காலத்தில் பெண் வெட்டுக்கிளிகளைக் கவர்வதற்காக தங்களுடைய இறக்கைகளை ஒன்றோடொன்று வைத்து தேய்த்து, இன்னிசை போன்ற ஒரு ஒலியை எழுப்புகின்றன. யாருடைய இசை நன்றாக இருக்கிறதோ, அந்த ஆணை நோக்கி பெண் நகரும்.

See Also

கேடிடிட் வெட்டுக்கிளி

கேடிடிட் வெட்டுக்கிளியின் விஞ்ஞானப் பெயர் ‘டெரோபில்லா கேம்லிஃபோலியா’ (PTEROPHYLLA CAMELIFOLIA). இது இறக்கைகளை அசைத்து இன்னிசை எழுப்பும்போது ‘கேடிடிட்’ என்ற ஒலி கேட்பதின் காரணமாய் இந்த ‘கேடிடிட்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ‘கேடிடிட்’ ஒலியை ஒவ்வொரு ஆண் வெட்டுக்கிளியும், ஒவ்வொரு விதமாய் மெட்டமைப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

இதே இனத்தில் தொடர்ந்து லெஸ்ஸர் மார்ஷ் கிராஸ்ஹாப்பர் (LESSER MARSH GRASSHOPPER). இன்னொரு வகை, காமன் ஃபீல்ட் கிராஸ்ஹாப்பர் (COMMON FIELD GRASSHOPPER), மூன்றாவது வகை, மீடௌ கிராஸ்ஹாப்பர் (MEADOW GRASSHOPPER), நான்காவது வகை, எகிப்தியன் கிராஸ்ஹாப்பர் (EGYPTIAN GRASSHOPPER), ஐந்தாவது வகை, மோட்லெட் கிராஸ்ஹாப்பர் (MOTTLED GRASSHOPPER), ஆறாவது வகை, ஈஸ்டர்ன் லப்பர் (ESTERN LUBBER), ஏழாவது வகை, வெஸ்டர்ன் ஹார்ஸ் லப்பர் (WESTERN HORSE LUBBER), எட்டாவது வகை அப்ஸ்கியூர் பேர்ட் கிராஸ்ஹாப்பர் (OBSCURE BIRD GRASSHOPPER), ஒன்பதாவது வகை, பிளாடர் கிராஸ்ஹாப்பர் (BLADDER GRASSHOPPER), பத்தாவது வகை, ஸ்டிக் கிராஸ்ஹாப்பர் (STICK GRASSHOPPER) என்று வெட்டுக்கிளியின் வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

மிகச்சிறிய வெட்டுக்கிளி

வெட்டுக்கிளிகளின் மிகச்சிறிய இனம் ஸ்லென்டர் க்ரவுண்ட்ஹாப்பர் (SLENDER GROUNDHOPPER).மற்ற வெட்டுக்கிளிகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்லென்டர் வகை வெட்டுக் கிளிகள் மிகவும் சிறியவை. அதாவது உடலின் நீளம் அரை அங்குலம் மட்டுமே. இதன் பொதுவான நிறம் பச்சையும் சாம்பலும் கலந்தது போன்ற மங்கலான நிறம். இதுதான் வெட்டுக்கிளிகளின் டெட்ரிஜிடேயின் (TETRIGIDAE) பழமையான குடும்பத்தைச் சேர்ந்தது. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்காவில் உள்ள பூச்சியியல் வல்லுநர்கள், இதை ‘பிக்மி டெவில்ஸ்’ (PYGMY DEVILS) என்று அழைக்கின்றனர். உருவத்தில் சிறியதாக இருந்தாலும், உருமறைப்புத் தோற்றத்தோடு அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டவை இவை.

உலகின் மிகப்பெரிய வெட்டுக்கிளி

உலகிலேயே அளவில் பெரிய வெட்டுக்கிளியின் பெயர் ஈஸ்டர்ன் லப்பர். இது தென்கிழக்கு அமெரிக்காவில் காணப்படும் தனித்துவம் வாய்ந்த வெட்டுக்கிளியாகும். பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். அடிவயிறு கருப்பு நிறத்தில் இருக்கும். ஆண் வெட்டுக்கிளி 90 மில்லி மீட்டர் நீளத்திலும், பெண் வெட்டுக்கிளி 70 மில்லி மீட்டர் நீளத்திலும், கனமான உடம்போடும், விகாரமான முகத்தோடும் காணப்படும். மிகவும் சோம்பேறியான இது, பறக்க சோம்பல் பட்டுக்கொண்டு மெதுவாய் நகரும். தத்திப் போகவோ தாவவோ செய்யாது. ஆனால், இவற்றை இரையாக்கிக் கொள்ள பறவைகள் வரும் போது, தங்களுடைய இரு கைகளை அசைத்து, துர்நாற்றம் வீசக்கூடிய ஒருவித நச்சுத் திரவத்தை காற்றில் பரப்பி, பறவைகளை விரட்டியடிக்கும் திறன் கொண்டது.
வெட்டுக்கிளிகள் மனிதனை ஒன்றும் செய்வதில்லை. ஆனால் மனிதனின் மிகப்பெரிய விரோதிகளில் இந்த வெட்டுக்கிளியும் ஒன்று என்பது உண்மையிலும் உண்மை.

-ராஜேஷ் குமார்
(வாவ் வளரும்)

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top