Now Reading
நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர் – 28

நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர் – 28

மென்பொருள் தேர்வு செய்வது எப்படி ?

புராஜக்ட் மேனேஜ்மெண்டின் வெற்றிக்கு பல காரணிகள் உண்டு, அவற்றில் ஒன்று நல்ல மென்பொருட்கள். நல்ல மென்பொருட்கள் ஒரு புராஜக்ட் மேனேஜர் செய்யவேண்டிய பல பணிகளை வெற்றிகரமாக செய்து ஒரு நல்ல நண்பனாக கூடவே வரும். குறிப்பாக பெரிய புராஜக்ட்களை செய்யும்போது, நிச்சயம் ஒரு புராஜக்ட் மேனேஜ்மெண்ட் மென்பொருள் இருக்க வேண்டியது அவசியம். தகவல்கள் தவறிவிடாமல் இருக்கவும், தகவல்கள் எப்போதும் ரெடியாகக் கிடைக்கவும் இவை மிகப்பெரிய துணையாய் இருக்கும்.

இன்றைக்கு புற்றீசல்போல ஏகப்பட்ட புராஜக்ட் மேனேஜ்மெண்ட் மென்பொருட்கள் பரவியிருக்கின்றன. அதில் எது நல்லது, எது பயனுள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது சிக்கல் விழுந்த நூல்கண்டை சரிசெய்வது போல கடினமானது. ஒவ்வொரு மென்பொருளும், தானே ‘சூப்பர் டூப்பர்’ என பிரகடனம் செய்துகொள்ளும். அந்த சுய தம்பட்டத்தை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பது எல்லோருக்குள்ளும் எழுகின்ற நியாயமான  கேள்வி. அதேபோல ‘போட்டியாளர்கள்’ அடுத்த மென்பொருளில் இருக்கின்ற சின்னச் சின்ன குறைகளைக் கூட மிகப்பெரியதாக பூதக்கண்ணாடியால் ஒளிபரப்பு செய்து கொண்டிருப்பார்கள்.

ஐந்து நிறுவனங்களில் வேலை செய்கின்ற ஐந்து நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள், “எதுப்பா நல்ல புராஜக்ட் மேனேஜ்மெண்ட் டூல்? நீ சொல்றதை வெச்சு தான் முடிவு பண்ணணும்” என்று. ஐந்து பேரும் ஐந்து மென்பொருட்களின் பெயரைச் சொல்வார்கள். அவர்கள் சொல்வதுதான் சிறப்பானது என சாதிக்கவும் செய்வார்கள். அதை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வரவும் முடியாது.

சரி, இணையத்தில் துழாவலாம். ஏதாவது குழுக்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது, என்ன மதிப்பெண் தரப்பட்டிருக்கிறது என கவனிக்கலாம் என்றாலும் முடியாது. ஒவ்வொரு தளத்திலும் கலவையான விமர்சனங்களே வந்து விழும். அதை வைத்துக்கொண்டும் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாது. பிறகு என்னதான் செய்வது? ஒரு நல்ல புராஜக்ட் மேனேஜ்மெண்ட் மென்பொருளை கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு கார் வாங்கப் போகிறீர்களெனில் என்ன செய்வீர்கள்? அதை முதலில் யோசித்து, அதன் அடிப்படையில் ஒரு மென்பொருளைத் தேர்வு செய்வது எப்படி என்பதை ஒப்பீடு செய்துகொள்ளலாம்.

முதலாவது, அது எத்தனை பேர் பயணம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என பார்ப்பீர்கள். அது என்ன நிறத்தில் இருக்கவேண்டும் என யோசிப்பீர்கள். அதன் பவர் எவ்வளவு இருக்க வேண்டும் என பார்ப்பீர்கள். அதன் வேகம் எவ்வளவு செல்ல வேண்டும் என பார்ப்பீர்கள். என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்பீர்கள். நீங்கள் இசை ரசிகராக இருந்தால், அதிலுள்ள ஆடியோ விஷயங்களை குறிப்பாகப் பார்ப்பீர்கள். மைலேஜ் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இது என்ன ரேட் என பார்ப்பீர்கள் இல்லையா?

ஆனால் எல்லோரும் அப்படிப் பார்க்க வேண்டுமென்பதில்லை. சிலர், “இந்த ரேட்டுக்குள்ள கிடைக்கணும், வொர்க்கிங் கண்டிஷன்னா ஓகே… மத்ததெல்லாம் பிரச்சினை இல்லை” என்பார்கள். சிலர், “ஓட்டறதுக்கு நல்ல ஸ்மூத்தா, ஈசியா, ஜாலியா இருக்கணும்… பணம் பிரச்சினை இல்லை என்பார்கள்” சிலர், “மெயின்டெனன்ஸ் அதிகம் வரக்கூடாதுப்பா” என்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் வேறு வேறு. அதனால்தான் ஒவ்வொருவருக்கும் திருப்தியின் அளவும், தேர்வின் முறையும் வேறு வேறாக இருக்கிறது.

இதை மனதில் வைத்துக்கொண்டு, நாம் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் மென்பொருள் தேர்வுக்கு வருவோம். இப்போது நீங்கள் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி, “எனக்கு எப்படிப்பட்ட மென்பொருள் தேவை?” என்பதுதான். என்னென்ன பணியை அந்த மென்பொருள் செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அது எப்படிப்பட்ட ரிப்போர்ட்களைத் தரவேண்டுமென நினைக்கிறேன்? எப்படிப்பட்ட வடிவத்தில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்? எந்த விலையில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். ஆண்டுக்கு எவ்வளவு பணத்தை அதற்காகச் செலவிடத் தயாராக இருக்கிறேன்? இப்படிப்பட்ட சில முக்கியமான கேள்விகளைக் கேளுங்கள்.

அதேபோல, அலுவலகத்தில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் எவற்றையெல்லாம் இந்த மென்பொருள் தீர்த்து வைக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் போன்ற விஷயங்களையும் சேகரியுங்கள். உதாரணமாக, அலுவலகத்துக்கு உள்ளேயே கம்யூனிக்கேஷன் சரியில்லை, பணியாளர்களுக்கு சரியான அளவில் வேலை பகிர்ந்தளிக்கப்படுவதில்லை, தெளிவாக புராஜக்ட்கள் கவனிக்கப்படுவதில்லை, தேவையற்ற கால விரயம் ஏற்படுகிறது. இப்படி எல்லாவற்றையும் பதிவு செய்யுங்கள். இவற்றை நிவர்த்தி செய்ய என்னென்ன வேண்டும் எனும் கேள்விகளையும் நீங்கள் கேளுங்கள்.

இந்த கேள்விகளையெல்லாம் முதலில் எழுதி வையுங்கள். அதன்பின் அந்த கேள்விகளை ஒன்று இரண்டு என்று முதன்மை அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள். அதாவது, ‘சமரசம் செய்து கொள்ளவே முடியாது’ எனும் விஷயங்களை முதலில் எழுதுங்கள். உதாரணமாக, ‘விலை இந்த அளவுதான் இருக்க வேண்டும். அதில் சமரசமே இல்லை’ என்றால் அதை முதலில் எழுதுங்கள். அடுத்த முக்கியமான விஷயத்தை இரண்டாவதாய் எழுதுங்கள். இப்படியே அனைத்தையும் எழுதுங்கள்.

இப்போது உங்களுடைய பட்டியலில் வருகின்ற முதல் ஐந்தோ, பத்தோ விஷயங்களைப் பூர்த்தி செய்கின்ற மென்பொருளைத் தேடுவது எளிதாகிவிடும். தேவையில்லாத விஷயங்களுக்கு அதிக நேரத்தைச் செலவிடுவதும் குறைந்துவிடும். இதுதான் ஒரு மென்பொருளைத் தேடும் முன் நாம் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள்.  மென்பொருளை வாங்கும் முன் அதை சிறிது நாட்கள் பயன்படுத்திப் பார்க்கும் டெமோ வெர்ஷன் இருந்தால், அதைப் பயன்படுத்திப் பார்ப்பது நல்லது. மென்பொருள் நல்லதா, அல்லதா என்பதைக் கண்டறிய அது ஒரு சிறப்பான வழி.

ஒரு மென்பொருளை எப்படியெல்லாம் தேர்வு செய்யலாம் என்பதன் ஓர் உயர்மட்ட 5 அளவீடுகளைப் பார்ப்போம்.

பயன்படுத்த எளிதானது! எந்த ஒரு மென்பொருளை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், அது எல்லா தரப்பு மக்களும் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். மேனேஜர் முதல் பணியாளர் வரை யாரெல்லாம் அந்த மென்பொருளைப் பயன்படுத்த வேண்டுமோ அவர்கள் அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளவும், பயன்படுத்தவும் முடிகின்ற வகையில் சிக்கல் இல்லாதபடி எளிமையாய் இருக்கிறதா என்பதை அலச வேண்டும். அதிக டிரெயினிங் எதுவும் தேவையில்லாமலேயே கற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதே சிறப்பானது.

மாற்றக்கூடிய வகையிலானது! அதாவது நீங்கள் வாங்குகின்ற மென்பொருளை உங்களுக்குத் தேவையான வகையில் கொஞ்சம் கொஞ்சம் மாற்றிக்கொள்ள அனுமதிப்பதாய் இருக்க வேண்டும். “நான் தருவதை மட்டுமே நீ பயன்படுத்த வேண்டும்” எனுமளவுக்கு மாற்றத்தை அனுமதிக்காத மென்பொருட்களை விலக்கிவைப்பதே நல்லது.

See Also

அத்தகைய மென்பொருட்களுக்காய் நாம் நிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகிவிடும்.

ஒரு புராஜக்ட்டுக்குத் தேவையான மிக முக்கியமான பணிகளைச் செய்யக் கூடிய அளவுக்கு அந்த மென்பொருளில் வசதிகள் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு புராஜக்டிலுள்ள பணிகளைப் பட்டியலிடவும், அதை ஒருவருக்கு அசைன் செய்யவும், அதன் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் இதில் வசதிகள் இருக்க வேண்டும்.

ஒரு புராஜக்டின் ரிப்போர்ட்களை எப்போது வேண்டுமானாலும் உருவாக்கக்கூடிய வசதிகள் அதில் இருக்கவேண்டும். இன்றைக்கு என்ன வேலை நடந்திருக்கிறது. இந்த கணத்தில் புராஜக்டின் நிலைமை என்ன போன்ற தெளிவான விஷயங்களை தகவல்களாகவோ, வரைபடங்களாகவோ தருகின்ற மென்பொருட்களே அதிக பயனுள்ளவை.

பணியாளர்கள் பணி செய்த நேரத்தைப் பதிவு செய்யக்கூடிய வசதிகள் இந்த மென்பொருளில் இருக்கவேண்டியது அவசியம். யாரெல்லாம் பணி செய்கிறார்கள்? பணியாளர்களுக்கு என்னென்ன பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு பணியிலும் எவ்வளவு நேரம் பணி செய்திருக்கின்றனர் போன்ற தகவல்கள் எளிதில் எடுக்கும் வகையில் இருப்பது அவசியம்.

இப்படி மிக முக்கியமான அம்சங்கள் இல்லாத மென்பொருட்களை, நீங்கள் வாங்குவது உங்களுக்கு தலைவலியாக மாறிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

– சேவியர்

(திட்டமிடுவோம்)

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top