Now Reading
15 மூலிகைகளால் தயாரிக்கப்படும் கபசுரக் குடிநீர்!

15 மூலிகைகளால் தயாரிக்கப்படும் கபசுரக் குடிநீர்!

கபசுரக் குடிநீர் ஒரு சித்த மருத்துவ மரபு மருந்து. சித்த மருத்துவ அடிப்படையில் சுரங்களின் வகை 64 என்கின்றது  யூகி வைத்திய சிந்தாமணி எனும் நூல். சுரங்கள் எப்படி எப்படியெல்லாம் வரும், சுரங்களின்போது எந்தெந்த குறி குணங்கள் காய்ச்சலோடு சேர்ந்து நிற்கும்? அந்த சுரத்தை குறிப்பிட்ட மருந்துகளை வைத்துக் குணப்படுத்தாது போனால், அது சன்னியாக எப்படி மாறும் எனும் அபாயத்தையும் சித்த மருத்துவத்தில் விளக்கும் முக்கிய நூல் அது. கபசுரம் அப்படிச் சொல்லப்பட்ட சுர வகைகளுள் ஒன்று.

மூன்று நான்கு நாட்களில் அதை குணப்படுத்த வேண்டும். அப்படி குணப்படுத்த இயலாது போகையில், அது ‘அபன்னியாச சன்னியாக’ மாறும் என்றும், அந்த அபன்னியாச சன்னி குணப்படுத்த மிகக் கடினமான அசாத்திய நோயாகவும் மாறும் என்று அந்த நூல் விவரிக்கிறது. இதுகாறும், சித்த மருத்துவர்கள், இந்த கப சுரத்தை வைரல் நிமோனியாவிற்கு அதை ஒட்டிய சுரத்திற்கு பயன்படுத்தி வந்தோம்.

மூலிகைகளின் கூட்டு

கபசுரத்தின் குறிகுணங்களாக கூறப்பட்ட குரல் கம்மல், இருமல், மூச்சிரைப்பு, சுரம் போன்ற முக்கிய குணங்கள் கோவிட்-19 நோயிலும் முக்கிய குறிகுணங்களாக இருந்ததால், அந்த கபசுரத்துக்கு பயன்பட்ட ஒரு மருந்தை நாம் ஏன் இந்த புதிய கோவிட் நோய்க்கு முயற்சிக்கக் கூடாது? ஆய்ந்தறியக் கூடாது? என சித்த மருத்துவ மூத்த வல்லுனர்கள் ஆலோசித்து தேர்ந்தெடுத்துச் சொன்ன மருந்துதான் கபசுரக் குடிநீர். இதனை 15 மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கச் சொல்லி உள்ளது ‘சித்த மருத்துவத் திரட்டு’ எனும் சித்த மருத்துவ நூல். ஆயுஷ் துறையின் சித்த மருத்துவ பார்மாகோபியா குழு வெளியிட்டுள்ள Siddha formulary of India நூலிலும் இந்த மருந்து செய்வழிமுறை அரசு ஆவணமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

சுக்கு, திப்பிலி, அக்கிரகாரம், கிராம்பு, கடுக்காய், சீந்தில், கோரைக்கிழங்கு, கற்பூரவல்லி, கறிமுள்ளி, நிலவேம்பு, ஆடாதோடை, சிறுகாஞ்சொறி, வட்டத்திருப்பி, சிறுதேக்கு, கோஷ்டம் ஆகிய இந்த மூலிகைகள் கொண்ட

கசாயத்தின் ஒவ்வொரு தாவரமும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.

கபசுரக் கசாயத்தின் சிறப்பு

இந்த கபசுரக் கசாயத்தின் சிறப்பே இதன் மிகத் துல்லியமான மூலிகைக் கலவை. ‘பித்தமாய்க் காத்து’ என்பது சித்த மருத்துவ நோய்த்தடுப்பின் வழி காட்டுதல். அந்த அடிப்படையில் பித்தத்தை சீராக்கி வைத்திருக்க உதவும் மூலிகைகளின் தொகுப்பே கபசுரக் குடிநீர். இதில் உள்ள முக்கிய கூறுகளான சுக்கு, வட்டத்திருப்பி, கடுக்காய், நிலவேம்பு, ஆடாதோடை அத்தனையும் பல்வேறு பிற வைரஸ் நோய்களுக்காக ஆய்ந்தறியப் பட்டவை. குறிப்பாக, இதில் சேர்க்கப்படும் ‘வட்டத்திருப்பி’ டெங்கு நோயின் மூன்று வைரஸ் பிரிவுகளில் பணியாற்றுவது நிரூபிக்கப்பட்டு, இன்று காப்புரிமை வரை பயணிக்கின்றது. நிலவேம்பும் ஆடாதோடையும் இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல ஆய்வகங்களில் ஃபுளூ சுரங்கள் முதல் புற்று வரை மிக நேர்த்தியாக பல நோய்களில் ஆராயப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வரும் மூலிகை.

உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய அறிவுறுத்தலில், இப்படியான மருந்தேதும் கண்டறியப்படாத இக்கட்டான காலகட்டத்தில், வழக்கமான ஆய்வுகளுக்காகக் காத்திராமல், Monitored Emergency Use of Unregistered and Investigational Interventions (MEURI) என்கின்ற வழிகாட்டுதலில் ஏற்கனவே பிற நோய்களுக்குப் பயன்பட்ட மருந்துகளை சோதனை அடிப்படையில் முயற்சிக்க  வலியுறுத்துகின்றது. இந்த வழிகாட்டுதலையும் கொண்டே கபசுரக் குடிநீரை தமிழக அரசின் சித்த மருத்துவர்கள் குழு தேர்ந்தெடுத்துள்ளது.

See Also

கபசுரக் குடிநீரை விநியோகிக்கும் வழி காட்டுதலையும் அரசுக்கு சித்த மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. சரியான தர நிர்ணயம் உள்ள இந்த குடிநீரை மாநில அரசின் தலைமை அலுவலகம் மூலம், அத்தனை மாவட்டங்களுக்கும் வழங்கவேண்டும். முதலில், நோய்த்தொற்று பெற்றவரின் தொடர்பிலிருந்த, தற்போது தடுப்பு ஒதுக்கத்தில் (quarantine & containment zone) உள்ள நபர்களுக்கும், முதல் நிலை மருத்துவப் பணியாளர்களுக்கும் வழங்கவேண்டும். “பொதுவாக யார் வேண்டுமானாலும் கசாயம் காய்ச்சிக் கொடுக்கும் நிலை கூடாது. அரசு சித்த மருத்துவ அலுவலர் அனுமதியின்றி பொது விநியோகம் கூடாது” உள்ளிட்ட கஷாயம் பெறுவோருடைய அத்தனை விவரமும் கணினி செயலி மூலம் மத்திய சித்த மருத்துவ கவுன்சில் வழி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

– ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவிலிருந்து…

– சித்த மருத்துவர் கு.சிவராமன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top