Now Reading
மறுக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மாணவருக்கான இடஒதுக்கீடு?

மறுக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மாணவருக்கான இடஒதுக்கீடு?

மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு மத்திய அரசால் மறுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. முதுகலை மற்றும் இளங்கலை மருத்துவ படிப்பில் கடந்த மூன்று கல்வி ஆண்டுகளில் 11 ஆயிரம் மருத்துவ இடங்களைப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் குற்றம்சாட்டியுள்ளது. உண்மை என்ன?

இட ஒதுக்கீட்டில் என்ன சிக்கல்?

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும், அகில இந்தியத் தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்த இடங்களை நிரப்பும்போது பிற்படுத்தப்பட்டோரின் அகில இந்திய ஒதுக்கீடு 27 விழுக்காடு ஒதுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

“2020ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பில், மாநிலங்களிலிருந்து 7981 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு மத்திய அரசு பெற்றுள்ளது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவே இல்லாமல் பூஜ்ஜியம் என்ற நிலைமை உள்ளது. அதுபோல கடந்த 2017-18ஆம் ஆண்டிலிருந்து 2019-20ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் மொத்தம் 11,879. இதில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான 3207 இடங்கள் பறிபோய்விட்டன.

மேலும், அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட முதுநிலை மருத்துவ இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 2017இல் 3101 இடங்களும், 2018இல் 2429 இடங்களும், 2019இல் 2207 இடங்களும், 2020இல் 2155 இடங்களுமாக நான்கு ஆண்டுகளில் மொத்தம் 9892 இடங்களைப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்து உள்ளனர்.

ஆக மொத்தம் கடந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளுக்காக மாநிலங்கள் வழங்கிய மொத்த இடங்கள் 42,842இல் ஒரு இடம்கூட பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடில்லை” என்று அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்திலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திலும் புகாரும் அளித்துள்ளது.

இதனையடுத்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுகுறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ஏன் நிரப்பப்படவில்லை என்று கேட்டு அரசமைப்புச் சட்டப் பிரிவு 338பி பிரிவின் கீழ் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணையைத் தொடங்கி உள்ளது.

மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் பெறப்பட்ட இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், மாநில அரசு கல்வி நிறுவனங்களிடமிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் பெறப்பட்ட இடங்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

இந்த சிக்கல் பற்றி தி.மு.க. சட்டத்துறை  அணி இணைச் செயலாளர் இ.பரந்தாமன் பேசும்போது, “மருத்துவ படிப்பில் எப்படி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை அறிவுறுத்தியுள்ளது. அதுபோல முதுநிலை மருத்துவ ஆணையத்தின் பிரிவு 9 (4) இன் படி, அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டைப் பின்பற்றியே மருத்துவ இடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் நமது மாநிலத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது, இதனைப் பின்பற்றினால் மத்திய தொகுப்பு மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கும்.

சில பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு, வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு சதவிகிதத்தில் இட ஒதுக்கீடு இருப்பதால்தான் இந்த சிக்கல் என்பது சரியான வாதமல்ல. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு எல்லா மாநிலங்களிலும் ஒரே அளவில்தானே உள்ளது மேலும் சிக்கல் இருக்குமானால், அந்தந்த மாநிலங்களில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்றிக்கொள்ளலாம் என்ற சட்டமும் உள்ளது.

எனவே, அந்தந்த மாநிலத்தில் உள்ளதுபோலவே இட ஒதுக்கீடு வழங்கலாம். அதுபோல இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது; அதனால்தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதும் தவறான வாதம். அப்படியானால் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள நிலையில், எப்படி அவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது” என்ற கேள்வியை எழுப்புகிறார்.

தொடர்ந்து பேசும் அவர், “மத்திய அரசில் அதிக அளவில் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள், பெயருக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதமராக இருந்தாலும், அவரால் முற்படுத்தப்பட்ட சமூக அமைச்சர்களை முந்திக்கொண்டு எந்த செயலையும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அதனால்தான் இதுதொடர்பாக கொள்கை முடிவு எடுக்காமல், வழக்கைக் காரணம் காட்டி மறுக்கிறார்கள்.

திமுக ஏன் இதனை 13 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளவில்லை என்று பாஜக கேள்வி எழுப்புகிறது. ஆனால், நீட் என்பதே 2016இல் இருந்துதான் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன்பு இதுபோல சிக்கல்களே இல்லை. நீட் தேர்வுக்கு முன்புவரை கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவோருக்கு மருத்துவ மேற்படிப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதனையும் பாஜக அரசு ஒழித்துக்கட்டி நீட்டை கொண்டுவந்தது. இப்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையும் மறுத்து , நாட்டில் சுமார் 52 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வஞ்சகம் செய்கிறது. அனைத்து மட்டத்திலும் முற்றிலுமாக இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம்” என்கிறார்,

மத்திய தொகுப்பு தேவையில்லை!

மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக முதன்முதலாக 28.06.2019 அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தவர் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். அவருடன் பேசினோம். “மத்திய ஒதுக்கீடு என்பது வேறு, மத்திய தொகுப்பு என்பது வேறு. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. சிறிய, பின் தங்கிய மாநிலங்களால் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க முடியாத அந்த சூழலில் மத்திய அரசு, மத்திய தொகுப்பை உருவாக்கியது. அதாவது எங்கெல்லாம் மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறதோ, அந்த மாநிலங்கள் தன் விருப்பத்தின் அடிப்படையில் தாங்களாகவே மத்திய தொகுப்புக்கு இடங்களை வழங்கினார்கள், இதன்மூலமாக மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாநிலங்களின் மாணவர்கள் கல்வி பயிலப் பயன்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட மத்திய தொகுப்பில் அது உருவாக்கப்பட்ட காலம் முதலே இட ஒதுக்கீடில்லை.

2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி அரசின்போதே நாங்கள் எஸ்.சி, எஸ்.டிக்கு மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டோம், அதற்கு அப்போது நடவடிக்கை இல்லை. ஆனால், 2007இல் கல்வி தொடர்பான சட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த நேரத்திலும்கூட மத்திய தொகுப்பு பற்றி பேச்சில்லை. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தொடர் கோரிக்கைகள் காரணமாக, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் நான் 2019 ஆண்டு இந்த ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன், திமுகவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது, அப்போதும் நடவடிக்கை இல்லை. எனவே, இன்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது” என்கிறார்

மத்திய தொகுப்பு பற்றி பேசும் இவர் “மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்பது, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே உள்ள மிகச்சிறந்த கட்டமைப்பு. நம் மருத்துவக் கல்லூரிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில்தான் அமைக்கப்படுகிறது, மத்திய அரசு தடையில்லா சான்றிதழ் மட்டுமே கொடுக்கிறார்கள். நமது வரிப்பணத்தில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரியின் மருத்துவ இடங்களை இளநிலையில் 15 சதவீதம், முதுகலையில் 50 சதவீதம் எதற்காக மத்திய தொகுப்புக்கு வழங்கவேண்டும். மத்திய தொகுப்புக்கு மருத்துவ இடங்கள் கொடுப்பது சுயவிருப்பத்தின் அடிப்படையில்தானே ஒழிய, இது தொடர்பாக எந்த சட்டமும் இல்லை. நமது மாநில மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கிய இடங்களை மத்திய தொகுப்புக்குக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் எதற்காக இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கையேந்த வேண்டும்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்குத்தான் எல்லாவற்றுக்கும் அதிக நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. அந்த மாநிலங்களிலேயே மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதானே, எதற்காக நம்மிடம் இருப்பவற்றைப் பிடுங்க வேண்டும். எனவே, தமிழக அரசு மத்திய தொகுப்பினை கொடுப்பதை நிறுத்தவேண்டும். மத்திய அரசு வேண்டுமானால் மருத்துவக் கல்லூரி இல்லாத மாநிலங்களில், கல்லூரி அமைத்து அந்தந்த மாநில மாணவர்களைப் படிக்க வைக்கட்டும். ஆதலால் மத்திய தொகுப்பு ஒழித்துக் கட்டப்பட வேண்டும், தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என்கிறார்.

மத்திய ஒதுக்கீடு!

See Also

“2007இல் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வந்தது. ஆனால், அச்சட்டத்தில் மாநிலங்களில் எதுபோன்ற இட ஒதுக்கீடு உள்ளதோ, அதனையே அந்தந்த மாநிலத்திலுள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பின்பற்றலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இது ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும். அதன்படி சென்னையில் உள்ள ஐ.ஐ.டியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், ஆனால், அதன்படி இதுவரை இந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இந்த சட்டத்தின் 2008ஆம் ஆண்டின் பிறசேர்க்கையின்படி “சென்டர் ஆஃப் எக்ஸசலன்ஸ்” எனப்படும் அட்டாமிக் எனர்ஜி, ஐ.ஐ.எஸ், ரிசர்ச் படிப்புகள் போன்ற படிப்புகளில் இட ஒதுக்கீடு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சூப்பர் ஸ்பெசாலிட்டி எனப்படும் எக்ஸலன்ஸ் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அதன் தரம் குறைந்துவிடும் என்று சட்டம் சொல்கிறது.

அதாவது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அதன் தரம் குறையும் என்று சொல்கிறது. இதனை நாம் ஏற்றுக்கொண்டால் இதனை ஒப்புக்கொள்கிறோம் என்று அர்த்தம். எனவே, இதுவரை இட ஒதுக்கீட்டின் வரம்பிற்குள்ளிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சென்டர் ஆஃப் எக்ஸசன்ஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்கின்றனர்” தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆர்வலர்கள்.

காங்கிரஸ் – திமுக ஏன் செய்யவில்லை?

இது காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி காலத்திலிருந்து உள்ள நடைமுறைதான் என்கிறார் பாஜகவின் செய்தி தொடர்பாளர் தி.நாராயணன். “கடந்த மூன்று வருடங்களாக ஓபிசிக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சொல்வது தவறு, கடந்த 14 வருடங்களாக இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்பதே சரி. இன்று திடீரென்று இந்த விவகாரத்தை எழுப்பும் திமுக, காங்கிரஸ், ஏன் அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று முதலில் பதில் சொல்ல வேண்டும்.

2008 நீதிமன்ற தீர்ப்பின்படி, இப்போது எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, ஆனால், பிற்படுத்தப்பட்டோரைப் பொறுத்தவரை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. உதாரணமாகத் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக உள்ள சமூகம், ராஜஸ்தானில் இதர வகுப்பில் உள்ளது. குஜராத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக உள்ள சமூகம், ஆந்திராவில் இதர வகுப்பாக இருக்கிறது, இதனால்தான் இதில் சிக்கல் எழுகிறது. மேலும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, எனவே, அந்த வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுவோம்.

இல்லை, அரசு கொள்கை முடிவுதான் எடுக்க வேண்டும் என்றால் 2006 முதல் 2014 வரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பதில் சொல்லவேண்டும். காங்கிரஸும் திமுகவும் ஆட்சியில் இருக்கும்போது சமூக அநீதியை இழைத்துவிட்டு, ஆட்சியில் இல்லாதபோது சமூகநீதி காப்பதுபோல வேடமிடுகின்றனர்” என்கிறார்.

– சு. வீரமணி

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top