Now Reading
முத்திரை பழகு!

முத்திரை பழகு!

ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் உடல், மனரீதியான பாதிப்புகளைப் போக்க மாணவர்களுக்கு முத்திரைப் பயிற்சி அளிக்கிறார் ஓர் ஆசிரியர்

நான் கோயம்புத்தூரில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறேன். கூடவே ஆன்லைன் வழியே பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு தமிழ் மொழி கற்பித்தலை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறேன். அதோடு இயற்கை மருத்துவம் பயின்றுள்ளேன். முத்திரைகள் மூலமாக நம் உடல் கூறுகளை சீர் அமைப்பதற்கான வழிகளையும் கற்பித்துவருகிறேன்.

இன்றைய கொரோனா சூழலில் கற்றல், கற்பித்தல் முறைகள் மாறி, ஆன்லைன் கல்வி பரவலாகிவருகிறது. மாணவர்களும் அதற்குத் தயாராகிவருகிறார்கள். ஆனால், ஆன்லைன் கற்றல் முறையில் ஆசிரியர்களுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி கணினி, செல்போன், லேப்டாப் போன்றவற்றின் முன்பு அதிக நேரம் இருக்கவேண்டியிருக்கிறது. இதனால் கண் எரிச்சல், தலைவலி, கழுத்துவலி போன்றவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபடவும், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் கற்றலில் ஈடுபடவும், நான் வகுப்பு துவங்குவதற்கு முன் கழுத்துப் பயிற்சி மற்றும் சில முத்திரைகளை செய்ய வைத்து, மாணவர்கள் தண்ணீர் அருந்திய பின்புதான் வகுப்புகளை எடுக்கிறேன். இதனால் நல்ல பலன் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் சலிப்பில்லாமல் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் கற்றலில் ஈடுபடுவதைக் கண்கூடாகக் காண்கிறேன்.

‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது’ என்பது சித்தர் வாக்கு. உலகில் உள்ள ஐந்து முதற்பொருட்களான பஞ்சபூதங்களும் நம் உடலிலும் உள்ளன. இந்தப் பஞ்சபூதங்களில் ஏற்படும் குறைபாடே நமக்கு வலி, நோய்களாகும். இவற்றை எளிய முறையில் நம் கைவிரல்களைக் கொண்டே நிவர்த்தி செய்துகொள்ளமுடியும் என்பதற்காகவே சித்தர்கள் யோக முத்திரைகள் மற்றும் தேக முத்திரைகளை வகுத்துள்ளனர்.

நமது கையில் உள்ள ஐந்து விரல்களுள் ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை இயக்குகிறது. பெருவிரல் நெருப்பு, ஆட்காட்டி விரல் காற்று, நடுவிரல் ஆகாயம், மோதிர விரல் நிலம், சுண்டுவிரல் நீர். எந்த பூதத்தைச் சமன்படுத்த வேண்டுமோ, அதற்குரிய முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தாலே, அந்த பூதம் சமனாகிவிடும். இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்துவந்தால் நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும் முடியும்.

முனிவர்கள் தவம் செய்யும்போது பசி, தாகம், நோய் இவை எதுவும் அண்டாமல் இருக்க முத்திரைகளைப் பயன்படுத்தினார்கள். உரிய முத்திரைகளை முறையாகக் கற்றுச் செய்யும்போது, உடலில் இருக்கும் குறிப்பாக விரலில் இருக்கும் சக்திப்புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன்மூலம் உடலின் உள்ளுறுப்புகளில் பிராண சக்தியின் அளவு அதிகரிக்கிறது.

ஆன்லைன் வகுப்பில் மாணவர்களுக்கு எளிமையாகச் செய்யக்கூடிய மூன்று முத்திரை பயிற்சிகளைக் கொடுக்கிறேன். அந்த முத்திரைகளையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போமா?

நீர் முத்திரை (வருண முத்திரை):

கட்டை விரலின் நுனியும், சுண்டு விரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்கவேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியபடி இருக்கவேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்ச பூதங்களைச் சமன் செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது. மேலும் இந்த முத்திரை செய்வதனால் நீரிழிவு நீங்கும். உடலில் சூடு சமமாகும். தோல் பளபளப்பாகும்.

சதைப் பிடிப்பு நீங்கும். முகப் பருக்கள் வராது. மனதில் அமைதி ஏற்படும். கணையம் மிக சிறப்பாக இயங்கும்.

தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது, முதுகுத் தண்டு மற்றும் கழுத்தை நேராக நிமிர்த்திவைத்து 5 முறை மூச்சை ஆழமாக நன்கு இழுத்து விடவேண்டும்.

பிராண முத்திரை:

கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல், மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்து 5 முறை மூச்சை நன்கு இழுத்துவிடவேண்டும். இந்த முத்திரை செய்வதால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்பார்வை கூர்மை பெறும்.

See Also

அனுசாசன் முத்திரை:

சுட்டு விரலை வளைவின்றி நேராக வைத்துக்கொண்டு, நடுவிரல், மோதிரவிரல், சுண்டு விரல் ஆகியவற்றைப் பெருவிரலுடன் இணைந்து வைத்து ஐந்து முறை மூச்சை நன்கு இழுத்துவிடவேண்டும்.

இதனால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் மனமும் தெளிவடையும். முதுகுத்தண்டு வலுவடையும். கழுத்து வலி குறையும். மூளை சுறுசுறுப்பை அடைந்து குழந்தைகள் புத்துணர்வு பெறுவர்.

இன்னும் இதுபோல் ஏராளமான முத்திரைகள் இருக்கின்றன. இந்த எளிமையான மூன்று முத்திரைகளை மட்டும் இப்பொழுது எங்கள் குழந்தைகளைச் செய்யவைக்கிறேன்.

‘தன்வந்திரி வைத்தியம் 1000’ என்ற நூலில் முத்திரைகள் குறித்து மிகவும் எளிய முறைகளில் விளக்கியுள்ளார் தன்வந்திரி. தமிழர் பண்பாடான இரு கரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான் என்கிறார். இதனை அஞ்சலி முத்திரை என்று சொல்கிறார்.

எளிய முறையில் உடல்நலம் பேணும் இந்த முத்திரைக் கலையானது பழந்தமிழர்களின் கண்டுபிடிப்பு. ஆனால், இன்று இதனை மாற்று மொழியினூடாக தெரிந்துகொள்ளும் நிலையில், நாம் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை.

-முனைவர்.வெ. மைதிலி

What's Your Reaction?
Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top