Now Reading
“தொலைநிலைக்கல்வி திறக்கும் புதிய கதவுகள்!”

“தொலைநிலைக்கல்வி திறக்கும் புதிய கதவுகள்!”

இந்தியாவில் பொதுவாக தொலைநிலைக்கல்வி என்பது மதிப்பிற்குரிய இடத்தில் வைக்கப்படவில்லை. வேலைவாய்ப்புச் சந்தையிலும் அதற்கு பெரிய வரவேற்பு அளிக்கப்படுவதில்லை. தற்போதைய சமூகச் சூழலில் திறந்தநிலை மற்றும்  தொலைநிலைக்கல்வி, உலகம் முழுவதும் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது…” என்கிறார் பள்ளிசாரா மற்றும் திறந்தநிலை, தொலைநிலைக் கல்வித்துறையில் அனுபவம் பெற்ற கல்வியாளர் பாரதி பாலன். தொலைநிலைக்கல்வியில் உள்ள வாய்ப்புகள்,  வளங்கள் குறித்து கல்வி இதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து…

இன்றைய கொரோனா சூழலில் தொலைநிலைக் கல்விக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன?

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக இந்தக் கல்வி ஆண்டு முற்றிலும் மாறுபட்ட சூழலில் தொடங்குகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்று உயர்கல்வி பெறவேண்டும் என்று திட்டமிட்டிருந்தவர்கள், பாதுகாப்புக் கருதி தங்கள் எண்ணத்தை மாற்றியுள்ளார்கள்.

இன்னும் சிலர் கல்வி வளாகங்களுக்குச் சென்று படிப்பதைத் தவிர்த்து, வீட்டிலிருந்தே உயர் கல்வியைப் பெற விரும்புகின்றனர். அதாவது, புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்புகள் உள்ளனவா என பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

2020 உலகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்களான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரி போன்றவை இணைய வழியாகவும், தொலைநிலைக் கல்வியில் பகுதிநேரமாகவும் படிப்புகளை வழங்குவது பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்து வருகின்றன.

அஞ்சல்வழிக்கல்வி, திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

இரண்டிற்கும் சொற்குழப்பம் இல்லாமல் அவற்றின் நுட்பமான மாறுபாடுகளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அஞ்சல் வழிக் கல்வி என்பது பாடத்திட்டத்திற்குரிய பாடக் குறிப்புகள் மாணவர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். அதை தாங்களாகவே படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறையோ இருமுறையோ நேரடி வகுப்புகள் நடத்தப்படும். அப்போது ஒட்டுமொத்தப் பாடங்களையும் சுருக்கமாகக் கற்றுக்கொடுப்பார்கள்.

திறந்தநிலை மற்றும் தொலைநிலைக்கல்வி சற்று மாறுபட்டதாக இருக்கிறது. அது சில படிநிலைகளும், நுட்பங்களும் உள்ளடக்கியதாக உள்ளது. இங்கு பாடப்புத்தகங்கள் மாணவர்கள் சுயமாகக் கற்றுக்கொள்ளும் வகையில், அறிவியல்பூர்வமாக எளிமையாகவும் விரிவாகவும் தயாரிக்கப்படுகின்றன. பாடநூல்களுடன் ஒலிஒளிக் காட்சிகளும், மின்னணுப் பாடப்பொருள்களும் வழங்கப்படும். மேலும், பாடங்களை விரிவாகப் புரிந்துகொள்வதற்கு யூடியூப் லிங்க், கூடுதல் பாடநூல்கள் குறித்த விளக்கமும் அளிக்கப்படும்.

மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதற்காக கவுன்சிலிங் வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்படும். அது மட்டுமல்லாமல், மாணவர்களின் கற்றலை தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்காக அசைன்மென்ட் வழங்கப்படும். அதை மாணவர்கள் வீட்டிலிருந்தே செய்யலாம், புத்தகங்களைப் பார்த்தேகூட எழுதலாம். இது ஒரு பயிற்சிபோல அளிக்கப்படுகிறது. ஆனாலும் அதற்காக வழங்கப்படும் மதிப்பெண்கள் இறுதித்தேர்வில் சேர்த்துக்கொள்ளப்படும்.

இந்தியாவில் தொலைநிலைக்கல்வி படிப்புகள் எப்படி இருக்கின்றன? எந்தெந்த கல்வி நிறுவனங்கள் படிப்புகளை வழங்குகின்றன?

18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில் உயர்கல்வியில் சேர்ந்து பயில்பவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக இருக்கிறது. தொலைநிலைக்கல்வியில் பயில்வோர் 10.62 சதவீதம். அதில் பெண்கள் 44.15 சதவீதம்.

கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டில் இந்திய அளவில் தொலைநிலைக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 72 ஆயிரத்து 68 பேர். தமிழகத்தில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 632 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 993 பல்கலைக்கழகங்களில் 15 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள்.அவற்றில் ஒன்று இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம். சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்பட 14 மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

மேலும், இந்தியா முழுவதும் 110 பல்கலைக் கழகங்கள் நேரடி முறையிலும், தொலைநிலைக்கல்வி வழியாகவும் படிப்புகளை வழங்கிவருகின்றன.

தொலைநிலைக்கல்வியில் யாரெல்லாம் சேர்ந்து படிக்கமுடியும்?

பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் தொலைநிலைக் கல்வியில் ஏதாவது ஒரு இளநிலைப் படிப்பைப் படித்துக்கொண்டே வேலை பார்க்கலாம். பணி அனுபவத்தோடு பட்டமும் கிடைக்கும். சிவில் சர்வீஸ் போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டே கூட படிக்கமுடியும். பிளஸ் டூ தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் சார்ந்த சான்றிதழ், பட்டயப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

இளநிலை அறிவியல் மற்றும் கலைப் பாடங்களில் பட்டங்களைப் பெற்று, ஆசிரியப் பணியில் அல்லது வேறு பணிகளில் உள்ளவர்கள் தொலைநிலைக் கல்வியில் சேர்ந்து அதே பாடப்பிரிவிலோ அல்லது வேறு பாடங்களிலோ முதுகலைப் பட்டம் பெறமுடியும்.

தொலைநிலைக்கல்வி படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கப்பட்டவையா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இதுபற்றி தெளிவுபடுத்துங்கள்?

இந்திய நாடாளுமன்றம் அல்லது மாநில சட்ட மன்றங்களில் சட்டம் இயற்றப்பட்டு, பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவில் தொலைநிலைக் கல்விக்கு முறையான அனுமதிபெற்ற பிறகே உயர்கல்வி நிறுவனங்கள் படிப்புகளை வழங்குகின்றன. நேரடி முறையில் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்ன விதிமுறைகளைப் பின்பற்றி பல்கலைக்கழக மானியக் குழுவிடம் படிப்புக்கு அனுமதி வாங்குகிறார்களோ, அதே நடைமுறைதான் தொலைநிலைக்கல்வி படிப்புகளுக்கும் பின்பற்றப்படுகின்றன.

தொலைநிலைக்கல்வியில் பாடவாரியான அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் பெறவேண்டும். இளங்கலை தமிழ், இளநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ என்று ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக அனுமதி வாங்க வேண்டும்.

See Also

பிஎட் படிப்பு என்றால் கூடுதலாக NCTE (National council for teacher education) அனுமதியும் தேவை. அப்படி அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதுதான் நல்லது. அந்தப் பல்கலைக்கழக இணையதளத்தில் அது சரியா என பார்க்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியோடு நடத்தப்படுகின்ற அனைத்துப் படிப்புகளும் மத்திய, மாநில அரசுகளின் பணி நியமனத்திற்கும் பதவி உயர்வுக்கும் ஏற்புடையது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?

தொலைநிலைக்கல்வியை ஒரு வரப் பிரசாதமாகவே உலகம் முழுவதும் மாணவர்கள் கருதுகின்றனர். சிறந்த உதாரணமாக பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகத்தைக் குறிப்பிடலாம். உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், நடிகர்கள், ஆளுமைகள் பலரும் அங்கு படித்தவர்களாக உள்ளனர். நேரடியாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிப்பதைவிட, இங்கு சேர்வதற்குத்தான் அதிக போட்டி. தற்போது, அங்கு 1,74,000 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். அந்தளவுக்கு சர்வதேச அளவில் தொலைநிலைக்கல்வி உயர்ந்த நிலையைப் பெற்றுள்ளது.

இதேபோல், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்த பலரும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெரும் பொறுப்புகளை வகிப்பவர்களாக உயர்ந்துள்ளனர். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, பலர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பணிகளைப் பெற்றுள்ளனர். புகழ்பெற்ற ஆட்சிப்பணி அதிகாரிகளில் பலரும் கூடுதல் பட்டங்கள் பெறுவதற்கு இங்கு சேர்ந்து படித்துவருகின்றர். இந்திய அளவில் இது தலைசிறந்த திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருக்கிறது.

நேரடியாக கல்லுரிகளில் சேர்ந்து கல்விபெறுவது போல் தொலைநிலைக் கல்வியில் கிடைக்குமா?

அதுவொரு வகை அனுபவம். இது ஒரு வேறுபட்ட அனுபவம். தொலைநிலைக் கல்வியில் வகுப்பறைச் சூழலை, அந்த உணர்வினைப் பெறுவதுடன் கூடுதலான தரத்தையும் பெறக்கூடிய வாய்ப்புகளை, தற்போது தொழில்நுட்பம் நமக்குத் தந்திருக்கிறது. தொலைநிலைக்கல்வியில் பாடங்களை வழங்குவதற்கும் கல்வியைப் பெறுவதற்கும் இணையமும் மின்னணுக்  கருவிகளும் பெரும் துணையாக இருக்கின்றன.

யூ டியூப், கூகுள் கிளாஸ் ரூம், ஜூம், மைக்ரோசாஃப்ட், மூடுல், ஜூம் வீடியோ வெப்மினார், கேன்வாஸ், எடோமோடோ, பிளாக்போர்டு லேர்ன், ஸ்கூலாஜி லேர்னிங், பிரிட்டிஷ் ஸ்பேஸ், கோ டூ மீட்டிங் போன்ற செயலிகள் வழியாக நேரடி வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய உணர்வைப் பெறலாம். மேலும் தலைசிறந்த பேராசிரியர்கள், நிபுணர்களிடம் கற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு சிறப்பாகச் சொல்கிறீர்கள். ஆனால், தொலைநிலைக்கல்வி பரவலாக மாணவர்களைச் சென்றடையவில்லையே ஏன்?

திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வியை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பள்ளிக்கல்வியில் இருந்தே மாணவர்களிடம் இந்தக் கல்விமுறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இன்னும் கிராமப் புறங்களில், தேர்ச்சி பெறாதவர்கள் பயிலக்கூடிய ஒரு கல்வி முறையாகத்தான் அதை நினைக்கிறார்கள். அஞ்சல் வழியாக படிக்கக்கூடிய படிப்பு என்பதும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. தொலைநிலைக்கல்வி பற்றிய விரிந்த பார்வை நமக்குத் தேவைப்படுகிறது.

சுந்தரபுத்தன்

What's Your Reaction?
Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top