Now Reading
கொரோனா தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள 10 கட்டளைகள்!

கொரோனா தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள 10 கட்டளைகள்!

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள்

1. தண்ணீர் குடியுங்கள்

நமது உடம்பில் 60 சதவீதம் நீர் உள்ளது. கோடைக்காலங்களில் உடலில் இருந்து அதிகம் நீர் வெளியேறும்; காய்ச்சல் வந்தாலே உடம்பிலிருந்து இன்னும் அதிக நீர் வெளியேறிவிடும். எனவே, சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கிறோம் என்றால், இப்போது நான்கு லிட்டர் அளவுக்கு குடிக்கவேண்டும்.

கொரோனாவால் நுரையீரல்தான் பாதிக்கப்படுகிறது. அப்படி பாதிக்கப்படும்போது வெளியில் இருக்கும் காற்றை இழுத்து ஆக்சிஜனை உள்ளே விடும் வேலை அதற்கு அதிகரிக்கும். எனவே, நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும். இதற்கும், தண்ணீர் குடிப்பது நல்லது.
பழரசங்கள், இளநீர், குளுக்கோஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் நீர்ச் சத்துடன் கொஞ்சம் தெம்பும் கிடைக்கும்.

2. ஏசி, குளிர்ந்த நீரை தவிர்க்கவும்

வெயிலில் சென்றுவிட்டு வந்து சில்லென்று ஃப்ரிட்ஜ் வாட்டரை குடித்தல், ஏசியை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துதல் போன்றவற்றால் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, வெளியில் சென்று வந்தால் குளிர்ந்த நீரைக் குடிக்காமல் சாதாரண நீரைக் குடித்தாலே போதும்.

மேலும், ஐஸ் வாட்டரைக் குடித்தால் உடனடியாக தாகம் போய்விடும். தாகம் போய்விட்டால் உடலுக்குத் தேவையான நீரைக் குடிக்க முடியாது. அதனால், முற்றிலுமாக ஐஸ் வாட்டரை தவிர்க்கலாம்.

ஏசியை எப்போதும் 26 டிகிரி செல்சியசில் வைத்திருப்பது நல்லது. சிலர் குளுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக 22 முதல் 18 டிகிரி செல்சியஸ் வரை வைத்துக்கொள்வார்கள். இதனாலும் சளி உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். சளி பிடித்தால் நம் எதிர்ப்பு சக்தி குறையும். அப்போது கொரோனா கிருமி நம் உடலுக்குள் நுழைந்தால் எளிதாக நம் நோய் எதிர்ப்பு சக்தியை வென்றுவிடும் வாய்ப்பிருக்கிறது. நாமே அதற்கு இடம் அளிக்கக்கூடாது.

3. வீண் அலைச்சல் அபாயம்

சளி, இருமல் பிரச்சினை இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது. கொரோனா பாதிப்பில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறவர்கள் அதிகம் வெளியில் சுற்றுபவர்கள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இருமலோடு வேலைக்குச் செல்பவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைகளை தட்டிக் கழிப்பவர்கள்தான் மூச்சுத் திணறலால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, லேசான இருமல் இருந்தாலே கட்டாயம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியில் வரக்கூடாது. நண்பர்கள், உறவினர்களுடன் அருகில் சென்று பேசுவதெல்லாம் கூடவே கூடாது.

அசதிதான் கொரோனாவின் முதல் அறிகுறி. அசதியுடன் இருமல், பசியின்மை இருந்தாலோ, மூச்சுத் திணறல் அதிகமானாலோ உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். மூச்சுத் திணறல் வந்தால் அபாய கட்டம் என்று அர்த்தம்.

4. மருந்துகளை நீங்களே வாங்கி சாப்பிடாதீர்கள்

சாதாரண காய்ச்சல், சளி, இருமலுக்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மெடிக்கல் ஸ்டோர்களில் நோய் அறிகுறிகளைச் சொல்லி மருந்துகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஆனால், இது இன்றைய சூழலில் கூடாது. உங்களுக்கு வரும் காய்ச்சல், சளி, இருமல் கொரோனா அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே அலட்சியம் வேண்டாம்.

காய்ச்சல், சளி, இருமல் தாண்டி கொரோனா தலைவலியாகவும் உடம்பு வலியாகவும் வரும். சில நேரத்தில் வயிற்றுப் போக்காகவும் அஜீரணக் கோளாறாகவும் வரும்.

நமக்கு வந்திருப்பது கொரோனாவா இல்லையா என்று பரிசோதனை செய்துகொள்ளாமல், மருத்துவரை ஆலோசிக்காமல், நேரடியாகப் போய் மருந்து கடைக்காரரை நாடினால், கை கால் வலியா – அதற்கான மாத்திரை, வயிற்றுப்போக்கு என்றால் அதற்கான மாத்திரை என்றே கொடுப்பார். கொரோனா பற்றிய புரிதல் அவருக்கு இருக்காது. ஆனால், மருத்துவர்களுக்கு கொரோனாவின் குணாதிசயங்கள் தெரியும். எனவே, அந்த அறிகுறிகளோடு வருபவர்களை விழிப்புணர்வோடு அணுகுவார்கள். அனைத்தையும் சோதித்துப் பார்த்துவிட்டு கொரோனாவா அல்லது சாதாரண தலைவலி, காய்ச்சலா என்று கண்டுபிடித்து சொல்வார்கள்.

5. காய்கறிகளைக் ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டாம்

மளிகை சாமான்களைக்கூட வாங்கி சில நாட்கள் வைத்துப் பயன்படுத்தலாம். அந்தப் பொருட்களில் கொரோனா தொற்று இருந்தாலும் இந்த இடைவெளியில் இறந்து விடும்.

பழங்கள், காய்கறிகளை அப்படி வைத்திருந்து பயன்படுத்த முடியாது. உடனே பயன்படுத்துவோம். இந்நிலையில், நாம் வெளியில் வாங்கிவரும் காய்கறிகளை விற்பனை செய்பவருக்கோ அல்லது அந்த கடைக்கு வந்து செல்பவருக்கோ தொற்று ஏற்பட்டிருந்தால், காய்கறிகளிலும் கொரோனா கிருமி இருக்க வாய்ப்பு அதிகம். அந்த காய்கறிகளை வாங்கி வரும் நாம், அதைத் தொடும் கைகளை முகத்திலோ மூக்கிலோ வைத்தால் நமக்கும் தொற்றிக்கொள்ளும். அதனால், காய்கறி, பழங்களை வெட்டியவுடன் கைகளைக் கழுவிக் கொள்ளவும்.

முக்கியமாகக் காய்கறி, பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் ஈரப்பதத்தில் கொரோனா கிருமி அப்படியே உயிர்வாழும்.

6. பிடித்தவர்களுடன் பேசுங்கள்

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைப்படும். ஒன்று, உடலைச் சார்ந்தது; இரண்டாவது, மனதைச் சார்ந்தது. உடலைச் சார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீர்ச்சத்துள்ள உணவுகள், புரதம் போன்றவற்றை சாப்பிடவேண்டும். மனதை சார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

மனதில் எப்போதெல்லாம் அழுத்தம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் அதிகமாக சுரக்கும். அதனால், மன அழுத்தம் அதிகமாகி நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அது நீரிழிவு நோயையும் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும். மேலும் சில பிரச்சினைகளும் வரும்.

மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள முக்கியமாக ஆறிலிருந்து ஏழு மணிநேரம் உறக்கம் இருக்கவேண்டும். பதற்றப்பட வைக்கும் செய்திகளைப் பார்க்கக்கூடாது; குறிப்பாக கொரோனா அப்டேட்டை பார்க்காதீர்கள்.

பாட்டுக் கேட்பது, புத்தகம் படிப்பது, மனதிற்குப் பிடித்தவர்களுடன் பேசுவது போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும்.

7. புகைப்பழக்கம், மது ஆபத்து

புகைப் பழக்கம் உள்ளவர்கள் உள்ளே இழுக்கும் புகை நுரையீரலுக்குத்தான் போகிறது. கொரோனாவும் நுரையீரலைத்தான் பாதிக்கிறது. அதனால், புகைப்பழக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், புகை பிடிப்பவர்களுக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும். அதனுடன் கொரோனாவும் சேர்ந்தால் சுவாசப் பிரச்சினை அதிகரிக்கும்.

இதுபோல் மதுவும் கொரோனாவுக்கு ஆகாது. வெளிநாடுகளில் குளிர் அதிகம் என்பதால் உடல் வெப்பத்தை அதிகரிக்க மது அருந்துவார்கள். வெப்ப மண்டலமான இந்தியாவிற்கு அது தேவையில்லாதது. மது நம் உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். உஷ்ணமாக இருக்கும் உடலைத் தாக்குவது கிருமிகளுக்கு எளிது.

டீ, காபியும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். எனவே, அவற்றையும் இப்போது குறைப்பது நல்லது. கொஞ்சம் சுறுசுறுப்பாகப் புத்துணர்ச்சி ஏற்படுத்த சாப்பிடலாம்.

8. அதிக உடற்பயிற்சி அவசியம் இல்லை

உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஆனால், அதிக உடலுழைப்பு தரும் வேலைகள், தீவிர உடற்பயிற்சிகள் போன்றவற்றை இக்காலத்தில் தவிர்க்க வேண்டும். உடலை வருத்தி எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது. இதுவும் கூடுதலாக நீர்ச்சத்தை உறிவதோடு உஷ்ணத்தை அதிகப்படுத்தும். ஏரோபிக் எக்ஸசைஸ், யோகா தியானம், நடைப்பயிற்சி போன்ற எளிமையானவற்றைச் செய்யுங்கள்.

கொரோனாவால் வயதானவர்களே அதிகம் இறக்கிறார்கள். அதற்குக் காரணமாக, அவர்களின் தோல்கள் விட்டமின் ‘டி’யை உற்பத்தி செய்யும் திறன் இல்லாமல் இருப்பதுதான் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

அசைவ உணவுகளில் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அசைவம் சாப்பிடாதவர்கள் வைட்டமின் டியை எளிதாகப் பெற சூரிய வெளிச்சம் படும்படி நிற்கலாம். நம் வீட்டின் மாடியிலோ வாசலிலோ மதிய வெயிலில் நிற்பது நல்லது.

See Also

தேங்காய் எண்ணெய்யை, தலையில் அல்லது உடம்பில் தேய்த்துக்கொண்டும் நிற்கலாம். 20 நிமிடங்கள் வெயிலில் நிற்பதால் கிடைக்கும் வைட்டமின் டி, தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டு நின்றால் இரண்டு நிமிடத்திலேயே கிடைக்கும்.

9. என்ன சாப்பிடலாம்?

மனித உடல் செல்லால் ஆனது. அந்த செல்லில் ஃப்ரீ ரேடிக்கல் என்ற பெயரால் குறிப்பிடப்படும் ஆக்ஸிடண்ட் நச்சுக்கள் இதயநோய் வரவைப்பதிலும், முதுமையை அதிகரிப்பதிலும், புற்றுநோய் உண்டாக்குவதிலும் அதிக பங்கு வகிக்கிறது. இந்த ஆக்ஸிடண்டுக்கு எதிராக செயல்பட்டு நம்மைக் காக்கும் சத்துமிக்க உணவு மூலக்கூறுகள்தான் ஆண்டி ஆக்ஸிடண்ட். இவை உயிர்வாழத் தேவையான செல்களை பாதுகாக்கும். நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும் நீரிழிவு நோய்களுக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் அதிகம் தேவைப்படுகிறது. இவை உடலில் உள்ள மாசுகளை
வெளியேற்றி கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கும்.

விட்டமின் சி உணவுகளில் ஆண்டி ஆக்சிடண்ட் அதிகம் உள்ளது. எனவே, விட்டமின் சி சத்துள்ள உணவுகள் செல்களின் வாழ்நாளைக் கூட்டும். ஒரு செல் என்பது குறிப்பிட்ட காலம்வரை உயிர் வாழ வேண்டும், செயல்படவேண்டும். அப்படி குறிப்பிட்ட காலம்கூட உயிர் வாழாமல் உடனேயே அந்த செல் இறப்பதை வைட்டமின் சி தடுக்கிறது.

கொரோனாவல் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுவதால், விட்டமின் சி சத்தை உட்கொள்ளவேண்டும். நெல்லிக் காய், பசலைக் கீரை, அவகோடா, ப்ராக்கோலி, எலுமிச்சை, கிவி, ஆரஞ்ச், அன்னாச்சிப் பழம், செர்ரிப் பழம், ப்ளுபெர்ரி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, குடை மிளகாய், பீன்ஸ் ஆகிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளலாம். இவற்றில் செர்ரிப் பழத்தில்தான் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உள்ளன.

செல் சுவர்கள் லூசாக இருந்தால் அதன் சின்ன சின்ன ஓட்டைகளின் வழியே வைரஸ்கள் எளிதாக உட்புகுந்துவிடும். இதற்கு மஞ்சள் உட்கொள்ளலாம். மஞ்சள் செல்சுவரின் விறைப்புத் தன்மையை அதிகப்படுத்தும். மஞ்சளில் ஆண்டி ஆக்ஸிடண்டோடு துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்தும் உள்ளது.
முளைக்கட்டிய தானியங்கள், கொண்டைக் கடலை, நட்ஸ்களிலும் ஜிங்க் சத்து அதிகம் இருக்கிறது.

எளிதாக ஜீரணமாகும் இட்லி, இடியாப்பம், பருப்பு சாதம், ரசம் சாதம், கஞ்சி ஆகாரம் போன்றவை இப்போது எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா அச்சம் காரணமாக வெளியில் செல்வதைக் குறைத்து, வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அதிக கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்ளாமல் சரி சதவிகித உணவு எடுத்துக்கொள்வது நல்லது.

காலை மாலையில் பால் அல்லது டீ குடிக்கும்போது இஞ்சி, மிளகுத்தூள், மஞ்சள் கலந்து குடிக்கலாம். காலையில் 2 அல்லது 3 துளசி இலைகளை மென்று விழுங்கலாம்.

முருங்கைக் கீரை, பாலக் கீரை, சிறுகீரை சூப் வைத்தோ உணவாகவோ உட்கொள்ளலாம். இவற்றால் ரத்தம் அதிகரிக்கும்.

எல்லா நோய்களும் நம் குடலிலிருந்துதான் தொடங்கும். அதனால், மலச்சிக்கல் இல்லாத உணவுகளைச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள கீரைகள், காய்கறிகள் பழங்கள் உண்ணவேண்டும். மக்காச் சோளத்தில் அதிகம் நார்ச்சத்து உள்ளது.

10. என்ன சாப்பிடக் கூடாது?

சளி, இருமல், காய்ச்சல் வருபவர்கள் அடிக்கடி மாத்திரை உட்கொள்ள நேரிடுவதால் காரமான உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. காரத்தோடு மாத்திரையைச் சேர்த்து சாப்பிடும்போது அமிலத்தன்மை அதிகமாகிவிடும்.

அசைவம் குறைப்பது நல்லது. அதேநேரம் புரதச்சத்துக்காக அளவாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாகக் கொழுப்பு அதிகம் இருக்கும் ஆடு, ரெட் மீட்ஸ்கள், அதிக எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். கொழுப்பு அதிகம் சேர்க்கும்போது ஜீரண சக்தியில் தட்டுப்பாடு உண்டாக்குவதோடு, அஜீரணக் கோளாறுகள் வரும்.

மாவுச் சத்துகள், இனிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதெல்லாம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

-பூ.சர்பனா

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top