Now Reading
அறிவியல் ஆர்வமுள்ள ஆசிரியர்களே… வாருங்கள் ஒன்றுசேர்வோம்!

அறிவியல் ஆர்வமுள்ள ஆசிரியர்களே… வாருங்கள் ஒன்றுசேர்வோம்!

குஜராத்தில் உள்ள ராமன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தமிழக இயக்குநராக, உடுமலையில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் கண்ணபிரான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம்.

“இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்குகின்ற விக்யான் பிரசார் நிறுவனத்தோடு இணைக்கப்பட்ட குஜராத்தில் உள்ள ராமன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமானது, இந்தியா முழுவதும் உள்ள அறிவியலில் புதுமைகளைப் புகுத்தும் மற்றும் அறிவியலில் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஆசிரியர்களைக் கண்டறிந்து, அவர்கள் மூலம் அறிவியல் பரப்புவது, புதுமைகளை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துவது எனப் பல செயல்பாடுகளை செய்துவருகிறது.

அதனடிப்படையில் தமிழகத்திலுள்ள அறிவியல் ஆசிரியர்களை, ‘ஆசிரிய விஞ்ஞானிகள்’ என்ற அமைப்பின்கீழ் ஒருங்கிணைத்து, அவர்கள் கண்டுபிடிக்கும் அறிவியல்சார் புதுமைகளையும், மாணவர்களிடையே அவர்கள் அறிவியலில் ஏற்படுத்திய புதுமைகளையும் வெளிக்கொணரும் பணிகளை செய்துவருகிறது.

தமிழகத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதாலும், கலிலியோ அறிவியல் கழகத்தை தொடங்கி அதன் மூலம் பல்வேறு அறிவியல் நிகழ்வுகளை நடத்திவருவதாலும், இந்த ஆசிரிய விஞ்ஞானிகள் அமைப்பின் தமிழக இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

கடந்து வந்த பாதை

2008-ல் ஆசிரியப் பணியில் சேர்ந்த நான், 2009 முதல் அறிவியல் விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்படுத்த ஆரம்பித்தேன். 2009ல், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்குகின்ற விக்யான் பிரசார் நிறுவனத்தோடு இணைந்து கலிலியோ அறிவியல் கழகம் மூலம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன்.

அரிய வானியல் நிகழ்வுகளை பள்ளி மாணவர்களிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கொண்டு சேர்த்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, கடந்த 9 ஆண்டுகளாக விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியிருக்கிறேன்.

2016 முதல் நான்கு ஆண்டுகளாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்குகின்ற பிரச்சார நிறுவனம் நடத்துகின்ற, தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வான, ‘வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்’ தேர்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் வழியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களும் இது போன்ற தேர்வுகளை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்வுக்கான புத்தகங்களையும் வினாத்தாள்களையும் தமிழில் மொழிபெயர்த்து ஊக்கப்படுத்தி வருகிறேன்.

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் சயன்ஸ் காங்கிரஸ் ஆயுள் உறுப்பினராக இணைந்து அறிவியல் சார் கருத்துக்களை நமது தமிழக மாணாக்கர்களுக்கு கொண்டு சேர்த்துவருகிறேன். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலமாக 2015 முதல் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2016 முதல் 2019 வரை தொடர்ச்சியாக கருத்தாளராகவும், உதவி ஒருங்கிணைப்பாளராகவும், 2019-ல் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினேன். இது போன்ற ஓர் அறிவியல் திருவிழா நடைபெறுவது தெரியாமல் இருந்த நமது தமிழக பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்தினேன்.

தமிழகம், லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் திருவிழாக்களில் தமிழக ஆசிரியர்களையும் மாணவர்களையும் அதிகளவில் பங்கேற்க வைத்தேன். அறிவியல் கிராமம் என்ற அந்த நிகழ்வுக்கு தேசிய அளவிலான ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன்.

பல்வேறு நிறுவனங்கள் அறிவியல் விழிப்புணர்வுக்காக எனக்கு விருதுகள் வழங்கியுள்ளன. 2018 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில் அறிவியல் விழிப்புணர்வுக்காக தேசிய விருது, ராமன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாகவே அந்நிறுவனத்தின் மூலம் தமிழகத்திலுள்ள அறிவியலில் ஆர்வம் உள்ள ஆசிரியர்களை இணைக்கும், ‘அறிவியல் ஆசிரியர் விஞ்ஞானிகள்’ என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்த இயக்குனராக அந்த நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளேன்.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் அறிவியல் ஆசிரியர்கள் புதுமைகளைப் படைக்க மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

See Also

அத்தகைய அறிவியலில் ஆர்வமுள்ள கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பில் சேர விருப்பம் உள்ள அனைத்து அறிவியல் ஆசிரியர்களும், அறிவியல் தன்னார்வலர்களும் தங்களது புதுமைகளை வெளிக்கொணர்ந்து அதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் மற்றவர்களுக்கு உதாரணமாகவும் திகழ வேண்டும் என்பது இதனுடைய முக்கியமான நோக்கம்.

அறிவியலில் சாதிக்க விரும்பும் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு, இந்த அறிவியல் ஆசிரியர் விஞ்ஞானிகள் அமைப்பு ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதில் தங்களை இணைத்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவியல் சார்ந்த பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் இணைய விருப்பமுள்ள அறிவியல் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் தொடர்புகொள்ளலாம்.

மின்னஞ்சல்: kannatnsfudt@gmail.com

அலைபேசி: 87782 019260

– மோ.கணேசன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top