Now Reading
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்!

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்!

ஐஏஎஸ் அதிகாரியின் புதுமை முயற்சி

கொரோனா பாதிப்பால் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மட்டுமின்றி மழலையர் பள்ளிகளும்கூட ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த ஆரம்பித்துவிட்டன. பல்கலைக்கழகம், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு பிரச்னை இல்லை. அதேபோல் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்கள் வேண்டியதை வாங்கித்தந்து ஆன்லைன் வகுப்பிற்கு தயார் செய்துவிடுவார்கள்.

ஆனால், அரசுப்பள்ளிகளில், மாநகராட்சிப் பள்ளிகளில் கூலித்தொழிலாளிகள், வீட்டு வேலை செய்வோர் போன்ற வீடற்ற, விளிம்பு நிலை மனிதர்களின் குழந்தைககளுக்கு உணவே பிரச்னையாக இருக்கும்போது, ஸ்மார்ட் போன் எல்லாம் சாத்தியமா?

அதை சாத்தியமாக்கி இருக்கிறார் சென்னை மாநகராட்சியின் கல்விப்பிரிவு துணை ஆணையரான கிரேஸ் பசாவோ ஐ.ஏ.எஸ். சென்னை மாநகராட்சியில் 70 உயர்நிலைப்பள்ளிகளில் வரும் கல்வியாண்டில், 10-ஆம் வகுப்பில் அடியெடுத்துவைக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் போன்களை இலவசமாக வாங்கிக் கொடுத்திருக்கிறார் கிரேஸ். பள்ளி எப்போது தொடங்குகிறதோ தொடங்கட்டும். ஆனால் மாநகராட்சிப்பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை கற்றுக்கொள்ளமுடியும்.

தொடர் வேலைகளில் பரபரத்துக் கொண்டிருந்த ஐஏஎஸ் அதிகாரி கிரேஸினை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். “கொரோனா ஊரடங்கினால் மாநகராட்சிப்பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிப்போயினர். இப்படியே விட்டால் இவர்களின் நிலை அதோகதியாகி விடும். வசதி படைத்த மாணவர்கள் எப்படி ஆன்லைனில் கல்வியறிவைப் பெறுகிறார்களோ, மாநகராட்சியில் படிக்கும் எங்களது மாணவர்களும் அதே கல்வியறிவைப் பெறவேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தேன்.

ஆசிரியர்களை அழைத்துப் பேசினேன். நமது பள்ளி மாணவர்களுக்கு கல்வியறிவைப் புகட்ட வேண்டும். அதற்கு ஆன்லைன் வகுப்புகள் சரியாக இருக்கும் என்றேன். எத்தனை மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கும் என்று கேட்டதற்கு, “எல்லோரும் விளிம்பு நிலை மனிதர்களின் பிள்ளைகள். 20 முதல் 30 சதவீதம் மாணவர்களிடம் மட்டுமே ஸ்மார்ட் போன்கள் இருக்கிறது” என்றனர்.

அப்போதே முடிவெடுத்துவிட்டேன். அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்தால் இது சாத்தியமாகும். எனக்குத் தெரிந்த கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி, உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டேன். பிரபல மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் 5000 மொபைல் போன்களை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தது. ரெட்மீ நோட் 6, ரெட்மீ நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களை அந்த நிறுவனம் வாங்கித்தந்தது.

மொபைல் கொடுத்தால் மட்டும் போதுமா? மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்க வேண்டும். கல்வி சார்ந்த வீடியோக்களை பார்க்க, வாட்ஸ்அப் குழுவில் ஆசிரியர்களோடு உரையாட, இண்டர்நெட் இணைப்பு வேண்டுமே? அதற்கு துளிர் பவுண்டேஷன் அமைப்பு உதவிக்கரம் நீட்டியது.

5000 ஆயிரம் மாணவர்களுக்கு மாதந்தோறும் 300 ரூபாய்க்கு இண்டர்நெட் பேக் போட்டுத்தருகிறார்கள். மேலும் தவறான வழியில் பயன்படுத்தும் மாணவர்களை இண்டர்நெட் கனெக்ஷன் தரும் நிறுவனம் மூலம் கண்டுபிடித்து, நல்வழிப்படுத்தவும் முடியும்.

அடுத்து, மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தவும், வகுப்பறைப் பாடங்களை ஆன்லைன் பாடங்களாக மாற்றும் வீடியோ ஷூட்டிங், எடிட்டிங், ஆன்லைனில் அப்லோடிங் உள்ளிட்டவற்றை கற்றுத்தருவதற்கு ‘டீச் ஃபார் இந்தியா’ நிறுவனம் எங்களுக்கு உதவி செய்திருக்கிறது.

இந்த நிறுவனங்களின் உதவியால் கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை சாத்தியமாக்கி இருக்கிறோம். எங்களுக்கென்று GCC EDUCATION என்ற யூ டியூப் சேனலையும் உருவாக்கி இருக்கிறோம். இதில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை தினந்தோறும் அப்லோடு செய்துவருகிறோம். இதை எங்கள் மாணவர்கள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் மாணவர்களும், ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார் உற்சாகத்துடன்.

கொடுங்கையூர் மாநகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முனிராமையாவிடம் பேசியபோது “நான்கு மாதங்களுக்கு முன்புதான் கிரேஸ் மேடம் வட இந்தியாவில் இருந்து சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் துணை இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

See Also

வந்தவுடன் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் போன் வழங்கி, ஒரு புரட்சியையே ஏற்படுத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏழைக்குழந்தைகளின் கையில் இன்று கல்விக்காக ஸ்மார்ட் போனை கொடுத்திருக்கிறோம். கொரோனா விரைவில் அடங்கும். அதுவரை மாணவர்களைப் படிக்க வைக்கவேண்டுமே.வீட்டில் இருந்தே படிக்கவைக்க இதைவிட வேறு சிறந்த வழி இல்லை.

எங்கள் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் இருக்கிறார்கள்.

இதற்கு காரணமாய் இருந்த கிரேஸ் மேடத்திற்கும், உதவிய நிறுவனங்களுக்கும் எனது நன்றிகள்…” என்றார்.

கொடுங்கையூர் மாநகராட்சிப் பள்ளி மாணவி அ.பர்ஜானாவிடம் பேசியபோது, “மூன்று வாரத்திற்கு முன்பு பள்ளி ஆசிரியையிடமிருந்து ‘பள்ளிக்கு வா… போன் இலவசமாக தருகிறோம்’ என்று போன் வந்தது. போனதும் புதிதாக ரெட்மி நோட் 6 மொபைல் போன் தந்தாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது.

வீட்டில் இருந்து ஆன்லைனில் படிக்க இந்த மொபைல் போன் உதவியாக இருக்கிறது. அப்பா ஆட்டோ ஓட்டுகிறார். அவர் வருமானத்திற்கு ஸ்மார்ட் போனெல்லாம் வாங்கித்தரமுடியாது. பள்ளியில் இருந்து தந்திருக்கிறார்கள். வாட்ஸ்அப் குழு மூலம் ஆன்லைன் வகுப்புக்கான லிங்க் கிடைக்கும். தினமும் வகுப்புகளை ஆன்லைனில் கவனிக்கிறேன். எங்களுக்கான யூ டியூப் சேனலிலும் பாடங்களை தினமும் கவனிக்கிறேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

– மோ.கணேசன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top