Now Reading
அச்சம் தவிர்!

அச்சம் தவிர்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்கும் விதமாக தமிழ்நாடு உளவியல் சங்கம் ஒரு கையேட்டை வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்…

மாணவர்களுக்கு…

ஓராண்டு காலம் நீங்கள் நன்றாக அறிவையும் திறனையும் உங்கள் ஆசிரியரிடமிருந்து பெற்றிருப்பீர்கள். ஆகவே முதலில் உங்களால் நன்றாகத் தேர்வு எழுத முடியும் என்று நம்புங்கள்.

 • படிப்பதற்கான பாடப்பொருள், நேரம் மற்றும் கால அளவு ஆகியவற்றைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
 • ஒரு நாளைக்கு எவ்வளவு படிப்பது என்ற நேர மேலாண்மை செய்துகொள்ளுங்கள்
 • உங்கள் கையில் இருக்கும் 24 மணி நேரத்தில் தூங்குவதற்கு 7 மணிநேரம், தயாராவதற்கு 2 மணிநேரம், உணவு உண்பதற்கு 2 மணிநேரம், ஓய்வுக்கு 2 மணிநேரம் என எடுத்துக்கொண்டால் கூட மீதம் 11 மணி நேரம் உங்கள் கையில் படிப்பதற்கு இருக்கிறது.
 • பாட வாரியாகவும், தலைப்பு வாரியாகவும் திட்டமிடுங்கள்.
 • திட்டமிடும்போது உங்கள் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து திட்டுமிட்டுக்கொள்ளுங்கள்
 • அவ்வப்போது மாதிரி வினாத்தாள் கொண்டு சிறு சிறு மாதிரித் தேர்வினை நீங்களே வீட்டில் எழுதி பாருங்கள்.
 • தேர்வுக்கு முதல் நாள் புதிய பகுதிகளை படிப்பதைத் தவிர்த்தல் நன்று.

ஆசிரியர்களுக்கு…

 • கொரோனா தொற்றுநோய் என்பது ஒரு இயற்கைப்பேரிடர் என்பதையும், அதிலிருந்து நாம் விடுபடுவோம் என்ற தைரியத்தையும் ஊட்டுதல்.
 • மாணவர்களின் தேர்வுசார் எதிர்மறை எண்ணங்களை களைதல்
 • உளவியல்ரீதியாக அணுகி, அவர்களால் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துதல்
 • அவ்வப்போது பாடம் தொடர்பாக எழும் ஐயங்களுக்கு தொலைபேசி வழி அல்லது இணையவழி உதவுதல்
 • வினாத்தாள் வடிவமைப்பின் கோணத்தில் பாடங்களை படிக்குமாறு கூறுதல்.
 • முக்கியமான குறிப்புகள், விளக்கங்கள் மற்றும் மாதிரி வினாக்களை ஊடக வழியில் வழங்குதல்
 • கற்றல் செயல்பாட்டை உயர் இலக்கோடு இணைத்தல்
 • பாடம் தொடர்பான வினாடி வினாக்கள் மற்றும் மாதிரித் தேர்வை இணையவழி நடத்துதல்
 • தேர்வில் வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கையை அளித்தல்
 • இணையவழி கலந்துரையாடல் மற்றும் விரிவுரைகளை நிகழ்த்துதல்.
 • மாணவர்கள் தங்களை கல்விசார் சுய மதிப்பீடு செய்துகொள்ள கற்றுகொடுத்தல்

பெற்றோர்களுக்கு…

 • குழந்தைகளிடம் போதுமான பாதுகாப்புணர்வையும், பாடம்சார் அக்கறையையும் காட்டுதல்
 • கொரோனா தொற்றுநோயிலிருந்து விடுபடுவதற்கு அரசு மற்றும் சுகாதாரத்துறை வழங்கியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தல்
 • குழந்தைகளின் மனவெழுச்சி சமநிலையை பராமரித்தல்
 • குழந்தைகளின் எதிர்கால இலக்குகளை நினைவுட்டி, அவர்களை கற்கத் தூண்டுதல்
 • உடல், மன வலிமையை ஏற்படுத்துதல்.
 • சுகாதாரமான காற்றோட்டமும் போதிய வெளிச்சமும் உள்ள இடம், அமைதியான, பொருத்தமான, கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துதல்.
 • தேவைப்படும் நேரங்களில் போதிய ஆலோசனைகளை வழங்குதல்.
 • குழந்தைகளின் மனப்போக்கை உணர்ந்து செயல்படுதல்.
 • ஆசிரியர்களிடம் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுதல்.
 • குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தி கற்கத் தூண்டுதல்.
 • தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவோம் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் ஏற்படுத்துதல்.
 • தம் குழந்தைகளை கற்கும் திறனுடையோர் என அங்கீகரித்தல்.
 • குழந்தைகளின் கற்றலுக்குத் தடையான கணினி, தொலைக்காட்சி, கைபேசி போன்ற கருவிகளை இயன்றளவு தவிர்த்தல்.
 • குழந்தைகளைப் பாராட்டல், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றல் மற்றும் அன்புடன் உரையாடல்.

ஆரோக்கியமான உணவு

 • காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பால் மற்றும் மீன், முட்டை போன்ற உணவுகளை இந்த நேரத்தில் பின்பற்றுவது நல்லது. இது மாணவர்களின் அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய உதவும்.
 • சீரான ரத்த சர்க்கரையைப் பராமரிக்க, அதிக சர்க்கரை மற்றும் அதிக கொழுப்புள்ள தின்பண்டங்களைத் தவிர்க்கவும்.
 • தண்ணீர் அல்லது இளநீர், பால் பானங்கள் அல்லது மூலிகை டீ ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் நீர்ச்சத்துடன் இருங்கள்.

போதுமான தூக்கம்

 • பகலில் உங்களுக்கு நேரம் இருந்தால், ஒரு குறுகிய தூக்கம் உங்கள் ஆற்றல் மட்டங்களை உயரச் செய்யலாம். மேலும் அளவான தூக்கம் உங்கள் உடலை நன்றாக மேம்படுத்தும்.
 • உறங்குவதற்கு முன்பு வேலை செய்ய வேண்டாம். அவ்வாறு வேலை செய்வது தூங்குவதை கடினமாக்கும். தூக்கமின்மையைத் தடுக்க உங்கள் வேலை இடத்தை உங்கள் தூக்க இடத்திலிருந்து தனித்தனியாக வைத்திருங்கள்.
 • தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் ஒவ்வொரு இரவும் குறைந்தது 6 – 8 மணிநேர தூக்கத்தைப் பெற வேண்டும். தூக்கம் குறுகிய கால நினைவகத்தை நீண்டகால நினைவகமாக உறுதிப்படுத்துகிறது மற்றும் அதிகரிக்கிறது. போதுமான தூக்கத்தை எடுத்துக்கொள்ளும் மாணவர்களால் தகவல்களை அதிக அளவில் நினைவில் ஏற்றுக்கொள்ள எளிதாகிறது.

தேர்வுக்கு முன்பும் தேர்வு எழுதும்போதும்…

See Also

 • நேர மேலாண்மையை கடைபிடித்தல்.
 • திட்டமிட்டு முழு ஈடுபாட்டுடன் படித்தல்.
 • படித்து முடித்தவுடன் நண்பர்களுடன் படித்ததைப் பற்றி கலந்துரையாடல் (அ) வினா விடை மூலம் தகவல்களை பரிமாறுதல்.
 • வினாக்களை நன்கு புரிந்துகொண்டு பதிலளித்தல்.
 • தேர்வு எழுதும்போது அடித்தல் திருத்தம் இன்றி எழுதுதல்.
 • முக்கிய சொற்களை அடிக்கோடிட்டு காட்டுதல்.
 • எழுத்துப் பிழையின்றி எழுதுதல்.
 • வினாக்களுக்கு சிந்தித்து பதிலளித்தல்.

மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்க தமிழ்நாடு அரசு இலவச மனநல ஆலோசனையை வழங்குகிறது. தொடர்பு எண்-14417

பேராசிரியர். கு. சின்னப்பன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top