Now Reading
கனவு கண்ட இளைஞர்… கைகொடுத்த டாடா!

கனவு கண்ட இளைஞர்… கைகொடுத்த டாடா!

பதினெட்டு வயது இளைஞரின் ஸ்டார்ட் அப் முயற்சிக்கு கைகொடுத்த ரத்தன் டாடா
மும்பைக்கு அருகிலுள்ள தானே நகரைச் சேர்ந்த அர்ஜுன் தேஸ்பாண்டேவின் புதுமையான முயற்சியால் ஈர்க்கப்பட்ட ரத்தன் டாடா, அந்த 18 வயது இளைஞரின் மருந்து விற்பனை தொடர்பான ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஆர்வத்துடன் முதலீடு செய்துள்ளார். அப்படியென்ன செய்கிறார் அர்ஜுன்?

“எங்களுடைய பிஸினஸ் பிளான் பற்றி ரத்தன் டாடா தெளிவாக அறிந்துகொண்டார். ஒவ்வொரு இந்தியருக்கும் பொது மருந்துகள் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உதவி செய்ய முன்வந்துள்ளார். ஆனால் அவர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்த முடியாது” என்று ஊடகங்களில் தெரிவித்தார் அர்ஜுன்.

தானே நகரில் அர்ஜுன் தேஸ்பாண்டே சாதாரண டீன்ஏஜ் பையனாக வளர்ந்தார். கால்பந்து விளையாட்டு மற்றும் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் இந்த இளைஞருக்கு, மிகக் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது.

“இன்று மருந்துகள் மிகப்பெரும் தேவையாக உள்ளன. ஆனால் அவற்றை சாமான்ய மனிதர்கள் வாங்குவதற்கு அதிக விலை கொடுக்கவேண்டியுள்ளது. வாங்கக்கூடிய விலையில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதன் மூலம், இந்த அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கமுடியும். மூத்த குடிமகன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தினமும் தேவைப்படும் மருந்துகளை மலிவு விலையில் வழங்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்று தெளிவாக விளக்குகிறார் ஜெனரிக் ஆதார் நிறுவனத்தை உருவாக்கிய அர்ஜுன்.

அரசு அங்கீகாரம் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தரமான மருந்துகளை இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் வாங்குகிறது. அவற்றை சந்தையைவிட 80 சதவீதம் குறைவான விலைக்கு மக்களுக்கு வழங்குகிறது. பிளஸ் டூ தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் அர்ஜுன், கடந்த ஆண்டில் பெற்றோர்களிடம் இருந்து வாங்கிய 15 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஸ்டார்ட்அப் தொடங்கினார்.

தனது நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி அர்ஜுன் சொல்கிறார்: “இந்தியாவில் பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள் பொது மருந்துகளை வாங்கி, தங்கள் பிராண்ட் பெயரிட்டு அதிக விலைக்கு விற்கின்றன. பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் காரணமாக, கூடுதல் விலையில் வாங்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். நாங்கள் அனைத்துப் பொது மருந்துகளையும் நேரடியாக சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குகிறோம்.

அவர்கள், எங்கள் பிராண்ட் பெயரில் மக்களிடம் விற்கிறார்கள்” என்கிறார்.

அர்ஜூனின் புதுமையான எண்ணத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்ந்த ரத்தன் டாடா, முதல் கட்டமாக சிறு நிதியை அவரது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வழங்கினார். “டாடா அவர்கள் எனக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிப்பவராக உள்ளார். அவர் செய்த உதவி எனக்கு உற்சாகம் அளித்து உள்ளது. அவருடைய நம்பிக்கை தான் என் இலக்காக இருக்கிறது. கடும் உழைப்பின் மூலம் எங்களுடைய தொழில் மாதிரியை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் அர்ஜுன்.

தன் 14 வயதிலேயே ஜெனரிக் ஆதார் போன்ற ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கும் சிந்தனை அர்ஜுனுக்கு வந்துவிட்டது. அவரது தாய், பார்மா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தாயுடன் சேர்ந்து வியட்நாம், துபை, சீனா மற்றும் அமெரிக்காவில் நடந்த தொழில் கண்காட்சிகளுக்குச் சென்றபோது, மருந்துகளின் விற்பனைக்குப் பின்னுள்ள உண்மைகளைத் தெரிந்துகொண்டார்.

“இந்தப் பயணங்களில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். பல நாடுகள் இந்தியாவில் இருந்து பொது மருந்துகளை வாங்கி நியாயமான விலையில் விற்றுவருவதை அறிந்துகொண்டேன். அதேவேளை, இந்திய நிறுவனங்கள் அந்த மருந்துகளை அவர்களது பிராண்ட் பெயருடன் அதிக விலையில் விற்கிறார்கள். நாட்டில் வாழும் 60 சதவீத மக்கள், இந்த மருந்துகளைப் பெறமுடியாத நிலை எப்படி நியாயமாக இருக்கமுடியும்?

இதைத் தெரிந்துதான் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்” என்கிறார் அர்ஜுன்.
தனி மருந்துக் கடைகள் வைத்திருப்பவர்கள், பெரிய மால்கள் மற்றும் ஆன்லைன் பார்மஸிகளை சமாளிக்க முடியாத சிரமங்களை அர்ஜுன் கண்டறிந்தார். ஒரு மருந்துக் கடைக்காரர் கடையை நிரந்தரமாக மூடும்போது, அவருடைய முழு குடும்பமும் சிரமத்திற்கு ஆளாகிறது.

இதனையெல்லாம் யோசித்தே அனைவருக்கும் பயன்படுவது மாதிரியான ஒரு திட்டத்தை உருவாக்கத் தொடங்கினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, மார்க்கெட் நிலவரம் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டார் அர்ஜுன் தேஸ்பாண்டே. தன் ஆராய்ச்சி முடிவுகளின் உதவியுடன் ஒரு தொழில்மாதிரியை உருவாக்குவது பற்றி சுகாதார நிபுணர்களுடன் பேசி தெரிந்து கொண்டார். ஆரம்பக்கட்டத்தில் பெற்றோர்கள் உதவி செய்தார்கள். பிறகு உலக சுகாதார நிறுவனம் மற்றும் மும்பை, தானே நகரங்களில் உள்ள சில மருந்து தயாரிப்பு நிறுவனங்களை உதவிக்கு அணுகினார்.

தொழிலுக்குப் புதியவர் மற்றும் வயது காரணமாகவும் தொடக்க நாட்களில் தடைகளைச் சந்தித்தார் அர்ஜுன். மருந்து தயாரிப்பாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் அவர்களிடம் இருந்து நேரடியாக மருந்துகளைப் பெற்றார். பிறகு அந்தப் பகுதிகளில் உள்ள பார்மஸிகளுக்குச் சென்று பேசினார். இவரது பிராண்ட்டின் கீழ் பல கடைகளை இணைத்ததும், 2019 ஏப்ரலில் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

See Also

இன்று அர்ஜுனின் ஜெனரிக் ஆதார் நிறுவனம், நான்கு மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் மும்பை, பெங்களூரு மற்றும் ஒடிசாவில் உள்ள 30 விற்பனையகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பயன்தருவதாக மாறியுள்ளது. அதாவது லாபத்தைப் பகிர்வதன் மூலம் மருந்துக் கடைகளுக்கு 20 சதவீதம் லாபம் கிடைக்கிறது.

மக்கள் 80 சதவீதம் குறைவான விலையில் மருந்துகளைப் பெறுகிறார்கள். தற்போது நீரிழிவு மற்றும் ஹைப்பர்டென்ஷன் மருந்துகளை வழங்கிவருகிறார்கள். விரைவில் புற்று நோய்க்கான மருந்துகளையும் குறைந்த விலைக்கு அளிக்கவுள்ளார்கள்.

“நான் வழக்கமாக வாங்கும் பிராண்டட் மருந்துகளைப்போல பொது மருந்துகள் தரமாக இருக்குமா என்று கவலைப்பட்டேன். நீங்கள் ஒருமுறை பயன்படுத்திப் பாருங்கள் தெரியும் என்றார்கள் ஊழியர்கள். அதே விளைவை பொது மருந்துகள் தந்ததை உணர்ந்தேன். இப்போது நான் பொது மருந்துகளை மட்டுமே வாங்குகிறேன். என்னுடைய மாதாந்திர மருந்துகளின் செலவு 50 சதவீதம் குறைந்துள்ளது…” என்று அனுபவத்தைப் பகிர்கிறார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அசோக் குல்கர்னி.

புதுமையான முறையில் மக்களுக்கு உதவும் ஜெனரிக் ஆதார் என்ற மருந்து விற்பனை நிறுவனத்திற்கு சந்தையில் நம்பகத்தன்மையும், ரத்தன் டாடாவின் நிதியுதவியும் கிடைத்துள்ளதால் பயணம் எளிதாகியுள்ளது. தற்போதைய ஆண்டு வருமானம் 6 கோடி ரூபாயாக உள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 முதல் 200 கோடி ரூபாயாக வருமானத்தைப் பெருக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சில மாதங்களில் குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, நியூடெல்லி, கோவா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 1000 பொதுமருந்து விற்பனையகங்களை ஏற்படுத்த அர்ஜுன் நாளும் பொழுதும் உழைத்து வருகிறார்.

– சுந்தரபுத்தன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top