Now Reading
கையாட்டி, டிக்கி டிக்கி, கண்ணாடி

கையாட்டி, டிக்கி டிக்கி, கண்ணாடி

தென்னை, பனை ஓலைகளில் குழந்தைகளுக்கான பொம்மைகள் செய்ய பயிற்சி தரும் ஆசிரியர்

மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியர் திலகராஜன், கையை நீட்டி மழையைச் சுவைக்கும் குழந்தையைப் போல ஆர்வத்துடன் பள்ளிக் குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்து காட்டிவருகிறார். ஜீவா நகரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரை விடுமுறை நாட்களில் பொம்மைகள் உலகில்தான் காணமுடியும். ஏதோ ஒரு பள்ளியில் தென்னை, பனை ஓலைகளைக் கொண்டு பொம்மைகள் செய்வது பற்றி பயிற்சி அளித்துக்கொண்டிருப்பார்.

நான்கு ஆண்டுகளில் 5500 குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்யும் செயல்முறை விளக்கம் வழங்கியுள்ளார். ஹெலிகாப்டர், காற்றாடி, வண்டு, டிக்கி டிக்கி, கையாட்டி என விளையாடும் பொம்மைகள் முதல் கிளி, புறா, தேர், நண்டு, கோழி, கொண்டைக்குருவி, வால்குருவி என காட்சிப்படுத்தக்கூடிய பொம்மைகள் வரை செய்துகாட்டிவருகிறார். சந்தையில் பதப்படுத்தப்பட்ட தென்னை மற்றும் பனையின் குருத்தோலைகளை விலைக்கு வாங்கி பொம்மைகள் செய்யப் பயன்படுத்துகிறார்.

“எங்க ஊர்ல சின்ன வயசுல நிறைய பொம்மைகள் செய்து விளையாடுவோம். காற்றாடிகள் செய்வோம். நான் செய்ற காற்றாடிதான் சுத்தும். அதனால் பள்ளி நண்பர்கள் என்னிடம் கொண்டுவந்து கொடுத்து சரிசெய்யச் சொல்வார்கள்.

குச்சியில் முள்வைச்சு பிசிறில்லாமல் காற்றாடி சுற்றுவது மாதிரி செய்யவேண்டும். முள்ளுக்கும் காற்றாடிக்கும் நல்ல இடைவெளி இருக்கவேண்டும். அப்பதான் காற்றாடி நல்லா சுத்தும். நாம் அனுபவித்த இயற்கையான விளையாட்டுப் பொம்மைகளை தற்காலக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாமே என்ற ஆர்வத்தில்தான் ஊர் ஊராகப் போய் தென்னை, பனை ஓலைகளில் பொம்மைகள் செய்யத் தெரிந்துகொண்டேன். இன்று அது குழந்தைகளின் உலகில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” என்று பேசத்தொடங்குகிறார் திலகராஜன்.

சோழவந்தானில் ஒரு தோப்பில் இளநீர் குடிக்கச் சென்றபோது, பெரியவர் ஒருவர் தென்னை ஓலையில் வண்டு ஒன்றைச் செய்து காட்டியுள்ளார். அது சத்தமிட்டபடி பறந்திருக்கிறது. அதைக்கண்டு ஆச்சரியப்பட்ட ஆசிரியர் திலகராஜன், அந்தப் பெரியவரிடம் வண்டை செய்துகாட்டச் சொல்லியிருக்கிறார். உடனே அவரால் அதைப் பின்பற்றிச் செய்ய முடியவில்லை. வீட்டிற்கு வந்து பலமுறை  செய்துபார்த்திருக்கிறார். எப்படியாவது வண்டு செய்வதை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற முடிவோடு மீண்டும் சோழவந்தான் சென்றுவந்துள்ளார்.

“பெரியவர் வண்டு செய்வதைக் கூர்ந்து கவனித்தேன். நானும் இருபது முறைக்கும் மேல் செய்திருப்பேன். வண்டு கைக்குக் கிடைக்கவில்லை. எல்லாவற்றிலும் ஒரு அறிவியல் இருப்பதை பிறகுதான் உணர்ந்தேன். தென்னை ஓலையை தேர்ந்தெடுப்பதில் இருந்து, அவர் ஓர் அளவு வைத்திருப்பதை அறிந்துகொண்டேன். என்னிடம் அவசரம் இருந்தது. பிறகு அந்த நுணுக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுத் தேர்ந்தேன். அதையே குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தேன். வண்டு செய்து பறக்கவிடும்போது அவர்கள் முகங்களில் சிரிப்பைப் பார்க்கவேண்டுமே. அத்தனை உற்சாகம் அடைவார்கள். அதுதான் எனக்குக் கிடைக்கிற ஊதியம்போல இருக்கிறது.

வாழ்க்கையில் வேறென்ன சந்தோசம் இருக்க முடியும்” என்று கேட்கிறார் குழந்தைகளின் மனவுலகில் குதூகலத்தை உருவாக்கும் தமிழாசிரியர்.

பல பொம்மைகளை பயணங்களின் வழியாக கற்றுள்ளார். தூத்துக்குடி செல்லும் போது பனை ஓலையில் கையாட்டி பொம்மை செய்யும் கலையை தெரிந்துகொண்டார். தேங்காய் குரும்பைக் கொண்டு செய்யும் டிக்கி டிக்கி, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. மென்மையான பொருட்களை செய்ய அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதும், நெகிழிக்கு மாற்றாக இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த வழிகாட்டுவதும் திலகராஜனின் விருப்பங்களாக இருந்திருக்கின்றன. அதையே அவரும் பள்ளிக் குழந்தைகளிடம் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

“ஞாயிற்றுக்கிழமைகளில் விரும்பி அழைக்கும் பள்ளிகளுக்குச் சென்று பொம்மைகள் செய்யும் பயிற்சி அளிக்கிறேன். இலவசப் பணி தான். அதற்காகக் கட்டணம் ஏதும் வாங்குவதில்லை. பொதுவாக குழந்தைகளுக்கு தனியாக ஒரு பொருளைச் செய்யும்போது, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஓலைகளில் முகக் கண்ணாடி செய்துபார்க்கும் அவர்கள், முதலில் அதை அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ, தாத்தாவுக்கோ போட்டுப் பார்த்துச் சிரிப்பார்கள். நானும் சில டெக்னிக்குகளை அவர்களிடம் இருந்து கற்றிருக்கிறேன். நான் செய்த காற்றாடியில் குண்டூசி நழுவியது. அதைப் பார்த்த ஒரு சிறுவன், குண்டூசிக்கு மேலே ஒரு தக்கையைச் செருகி சரிசெய்தான். அதையே நான் தற்போது பின்பற்றி காற்றாடிகள் செய்கிறேன்.  வெறுமனே கையாட்டி பொம்மையைத்தான் செய்துவந்தேன். அந்த பொம்மைக்கு ஒரு சிறுமி டிரஸ் போட்டுவிட்டாள். ஒரு பையன் கண்ணாடி போட்டான். மற்றொரு குழந்தை தலைமுடி மாட்டிவிட்டது. இப்படி குழந்தைகள் எனக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள்” என்று உற்சாகம் குறையாமல் பேசுகிறார் திலகராஜன்.

See Also

எப்போதும் குழந்தைகள் படைப்பாற்றலுடன்தான் வளர்கிறார்கள். நாம் வாய்ப்புகள் கொடுக்கும்போது தங்கள் திறனை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வாய்ப்புகளைத்தான் ஊரெங்கும் பள்ளிகளைத் தேடிச் சென்று குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார் இந்த ஆசிரியர். மேலும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பொம்மைகளைச் செய்ய கற்றுக்கொடுப்பதன் மூலம் கற்பனைகளை வளர்த்தெடுக்கிறார். ஊரடங்கு காலத்தில் யூ டியூப் மூலம் பொம்மைகள் செய்யும் டெமோக்களையும் செய்துகாட்டியுள்ளார்.

“பள்ளி வகுப்பறைகளைத் தாண்டி, படிப்பைத் தாண்டி குழந்தைகளுக்கு பசுமையான நினைவுகளை, பொம்மைகள் வழியாக உருவாக்குவதில் அரும்பும் மகிழ்ச்சி கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. நம்முடைய பிள்ளைகள்  இழந்த பொம்மைகளின் உலகை மீட்டெடுப்பதில் ஆத்ம திருப்தி எனக்கு” என்று சொல்லும்போது திலகராஜனின் குரலில் அத்தனை நெகிழ்ச்சி.

– சுந்தரபுத்தன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top