Now Reading
Think Positive: வாங்க, வாழப் பழகுவோம்!

Think Positive: வாங்க, வாழப் பழகுவோம்!

அதீத அச்சம் முதல் வித்தியாசமான வாய்ப்புகள் வரை கொடுத்துள்ள கோவிட்-19 கிருமி, பழைய சில சொற்களை புதிய வடிவில் பயன்பாட்டிற்கும் கொண்டு வந்துள்ளது. ‘கோ கொரோனா கோ’ தொடங்கி வீட்டிலிரு, விலகியிரு, சமூக இடைவெளி, புதிய இயல்பு வரை நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் முக்கியமான ஒன்று கொரோனாவுடன் வாழப் பழகுவோம்.

உலக சுகாதார நிறுவனம் என்ன அர்த்தத்தில் இதை அறிவுறுத்தியது என்பதைவிட, மக்கள் இதை எப்படி அணுகிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரே நாளில் நான்கு இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை என அறிவிக்கப்படும் தலைநகரில் வசிக்கும் ஒருவர் “பார்லர் போய்ட்டு வந்துட்டேன்” என செல்ஃபிகளைத் தோரணம் கட்ட, ‘ஆஹா…ஓஹோ… அழகு’ எனப் பின்னூட்டம் இட்ட பலருக்கும் “கொரானாவுடன் வாழப் பழகிட்டோம்ல” என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்.

நேற்று நடைப்பயிற்சி வழியின் மையத்தில் கும்பலாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள், சப்தமாகச் சிரித்தபடி சொன்னதும்கூட “நாங்க கொரானாவோட வாழப் பழகிட்டிருக்கோம்” என்பதுதான்.

என் அதிர்ச்சியெல்லாம் கண்ணுக்கே தெரியாத கொரோனாவுடன் குடித்தனம் நடத்தும் அளவிற்கு, நம் அறிவும் கண்ணுக்கே தெரியாமல் சுருங்கியிருப்பதை நினைத்துத்தான். எப்போதுதான் நாம் எதையும் அதனதன் உண்மையான பொருளோடு புரிந்து கொண்டிருக்கின்றோம். வெறியூட்டும் உணர்வுப்பூர்வமாக அணுகுகின்றோம் அல்லது எல்லாவற்றையும் பகடி செய்து மழுங்கடிக்கின்றோம்.

முடிவெடுத்தல் மற்றும் மன அழுத்தம் தவிர்த்தல் ஆகியவை குறித்து உரையாடும்போது அழுத்தம் திருத்தமாகச் சொல்வது, ‘பிடிக்காத ஒன்றில் தொடர்ந்து இருக்க வேண்டாம்’. இருக்கவேண்டாம் என்றால் என்ன செய்வது? பிடித்த விதமாக மாற்றிக் கொள்வதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்துப் பாருங்கள். அதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்காவிடில் அதைவிட்டு வெளியேறி விடுங்கள். ஒருவேளை சரி செய்யவும் இயலாது, வெளியேறவும் வாய்ப்பில்லை என்றால், ஏற்றுக்கொண்டு அதையே தொடருங்கள். மிக முக்கியமானது அப்படித் தொடர்வதாக முடிவெடுத்த பிறகு, அந்த நிலை குறித்து, புகார் எதுவுமின்றி தொடருங்கள் என்பதுதான்.

இதனை தற்போதைய சூழலுடன் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. நோய்த் தொற்று, வேலை – தொழில் – வியாபார முடக்கம், பொருளாதார நெருக்கடிகள், எங்கும் போகமுடியாமல் முடங்கிக் கிடக்கும் நிலை. ஆழ்ந்து யோசித்தால் இந்த யாவுமே மனது மற்றும் உடலளவில் நெருக்கடிகளைத் தாங்க முடியாமையைத் தொடர்ந்து திணிக்கின்றன. யாருக்கும் அதில் தொடர்ந்து நீடிக்கப் பிடிக்கவில்லை. அதிலிருந்து ஏதேனும் மாற்றங்களை உருவாக்கமுடியுமா என்றால், அதற்கான வாய்ப்புகளும் அடைக்கப் பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

ஆகவே, நோய்த்தொற்று குறித்த அச்சம், தொழில் வேலை வாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, பொருளாதார நெருக்கடிகள், ஓடிக் கொண்டிருந்த பரபரப்பு வாழ்க்கையில் ஒட்டுமொத்த உள்ளிருப்பு முடக்கம் ஆகியவற்றில் உடனடியாக சரி செய்யக்கூடிய பெரும்பான்மையானவை நம் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தச் சூழலில் நாம் செய்ய வேண்டியது, எது நெருக்கடியைக் கொடுத்ததோ, கொடுத்துக் கொண்டிருக்கிறதோ, இன்னும் கொடுக்குமோ அதை அவ்விதமே ஏற்றுக்கொள் என்பதையே “வாழப் பழகிக்கொள்ளுதல்” எனக் கருதுகிறேன்.

அனைத்து முடக்கங்களின் பின்னாலும் பிரமாண்டமாய் நிற்கும் எவர் பார்வைக்கும் நேரடியாகத் தெரியாத நுண்கிருமி நமக்கு வேண்டாம்தான். வேண்டாததை வரவிடாமல் தடுக்க தடுப்பூசியும், நலமாக்க சரியான மருந்தும் இல்லை. அது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மாற்றிக் கொள்ளும் புதிய தன்மைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே பாதிப்புகளுக்குள் இரையாகாமல் வாழ்ந்துவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு மட்டுமே உரத்துச் சொல்வது “கொரோனாவுடன் வாழப் பழகுங்கள்”. மீண்டும் சொல்கிறேன் அது கூடிக்குலாவி இணைந்து வாழ்வதல்ல. கிருமி இங்கே உலவிக் கொண்டிருந்தாலும், உரசிக்கொள்ளாமல், ஒட்டிக் கொள்ளாமல் ஒதுங்கியபடி வாழ்வதே, வாழப் பழகுதல்.

உடல் உபாதைகள் இருந்தவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரை மட்டுமே வீழ்த்தும் என இதுவரை அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தொற்று அறிகுறி துளியும் இல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கும் இளம் வயதினரையும் எளிதில் வீழ்த்துவதை அறிய நேர்கிறது. ஆனால் தொற்றிய அனைவரையும் அது வீழ்த்திவிடவில்லை. மிக மிகக் குறைந்த சதவிகிதம் மட்டுமே. வழக்கமான எந்த மரண எண்ணிக்கை சராசரியையும் இது தாண்டி விடவில்லை.

அரசின் அறிவிப்புகள் முழுக்க உண்மையாகவும், முழுக்க பொய்யாகவும் இருக்க முடியாது. எந்த அடிப்படையில் இயங்குவது? அலையலையாக வரும் வதந்திகளை தெளிவாக ஒதுக்கி, உலகம் உள்ளங்கைக்குள் வசப்பட்டிருக்கும் இந்த நிலையில் சற்று மெனக்கெட்டால், ஓரளவு உண்மை மற்றும் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பாதுகாப்பாக இருக்க முடியும்.

பாதுகாப்பாக இருப்பதென்பது முழுக்க வீட்டிலேயே முடங்கி இருத்தல் அல்ல. முடங்கியிருக்க வேண்டியதில்லை என்றால் உடனே அழகு நிலையத்திற்கும், நடைப்பயிற்சி தடத்தில் கூடிக் குலாவி அரட்டை அடிப்பதற்கும், வயல் வெளியை சமன் செய்து ஆயிரம் பேரை அழைத்து திருமணம் நடத்துவதும், பேருந்தில் நெருக்கியடித்துப் பயணம் செய்வதும் அல்ல.

முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஐநூறு என்றிருந்த தொற்று ஐந்தாம் கட்ட ஊரடங்கு என ஏறத்தாழ 90% தளர்த்தப் பட்டபோது இரண்டு லட்சத்தை நெருங்கி இருக்கின்றது.

See Also

சாதாரண சூழலில் அசாதாரணமாக முடங்கியிருந்த நாம், அசாதாரண சூழலில் சாதாரணமாக புழங்கத் தொடங்கிய முரண் தான் புரியவில்லை. ஊரடங்கு நிரந்தரமாக நோய்த் தொற்றுக்கு வேலியோ, நமக்கு பாதுகாப்பு வளையத்தையோ அமைத்து தர முடியாது. அதுவொரு வாழ்க்கை முறையை பழக்கிக் கொடுத்தது, அவ்வளவே! வீட்டில் இரு, இருப்பதை வைத்து சமாளி, ஓடியோடி ஒன்றுகூடாதே, வெளியே செல்லாதே, தூய்மை பேணு, எதையும் தொடாதே, எவருடனும் நெருங்கி நிற்காதே, அனைவரையும் தொற்றுள்ளவராய் சந்தேகிக்கலாம், ஆனாலும் வெறுத்து ஒதுக்காதே உள்ளிட்ட பாடங்களைத்தான்.

இந்த நிலையில் தளர்வுகள் என்பது, ‘எல்லாம் முடிந்துவிட்டது ஓடி வாருங்கள். ஒன்று கூடலாம்’ என்பதற்கல்ல. செயலிழந்து கிடக்கும் சில துறைகளை

காலத்தின் நியாயம் கருதி இயக்க வேண்டி இருக்கிறது, எனவே தகுந்த பாதுகாப்போடு அவற்றை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு ஒவ்வொருவரும் விலகியிருந்து, ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமே தேவையேயன்றி, ஒன்றிணைவதன் மூலம் மிகப் பெரிய சிக்கல்களை வரவழைத்துக் கொள்வதல்ல.

கொரோனா உலவும் சூழலில் நாமும் வாழப் பழகுவதுதான் தேவையே தவிர, கொரானாவை வாழவைப்பது நம் இலக்காக இருக்கவேண்டாம்.

– ஈரோடு கதிர்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top