Now Reading
இணையமே… இணையமே…

இணையமே… இணையமே…

கொரோனாவை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சில பயனுள்ள இணையதளங்கள்
உதவிப்பாலம்

கொரோனா ஏற்கெனவே பொருளாதாரத்தைப் பதம்பார்த்து பணியிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சேமிப்பு இல்லாதவர்கள் அல்லது இருக்கும் சேமிப்பை கரைத்துவிட்டவர்கள் நிலை மிகவும் கடினம்தான். உலகில் பல நாடுகளில் இதுதான் நிலை. அமெரிக்காவில் இப்படி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்களில் ஒன்று 1கே புராஜெக்ட்.

கொரோனா பாதிப்பால் பொருளாதார உதவி தேவைப்படும் குடும்பங்களைக் கண்டறிந்து, பணம் அளிக்க வழி செய்வதுதான் நோக்கம். உதவிக்கு கண்டறியப்படும் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் ஆயிரம் டாலர் அளிக்கவுள்ளனர். பண உதவி செய்யக்கூடிய ஸ்பான்சர்கள் இந்த தொகையை அளிப்பார்கள்.

இணைய முகவரி: www.1kproject.org

கொரோனாவைக் கொல்வது எப்படி?

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான, அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எளிமையாக வலியுறுத்துகிறது பிளாட்டன் தி கர்வ் இணையதளம். இதனை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினைச் சேர்ந்த மென்பொருளாளர் ஒருவர் அமைத்துள்ளார். கொரோனா தடுப்பில் கை கழுவுவதன் அவசியத்தை கணிதத்தின் துணைகொண்டு விளக்குகிறது. மொத்தமே ஒரு பக்கம் (கொஞ்சம் நீளமான பக்கம்) கொண்ட இந்த தளம், கொரொனா பரவலைத் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதைக் கச்சிதமாகப் புரியவைக்கிறது.

இணைய முகவரி: www.flattenthecurve.herokuapp.com

தனித்திருந்து கதையெழுது!

ஊரடங்கில் தனித்திருக்கும் சூழலில் ஒவ்வொரு வீடுகளிலும் நிகழும் உறவு சார்ந்த சிக்கல்களை, கதைகளாக ‘சோசியல் டிஸ்டன்சிங் புராஜக்ட்’ பதிவு செய்துவருகிறது.அந்தக் கதைகளைப் படிக்கும்போது, தனித்திருக்கும் சூழலின் அழுத்தத்தை உணர்பவர்கள் அவற்றில் இருந்து மனதளவில் சற்றேனும் விடுபடலாம். அதே நேரத்தில், மனித உறவுகளின் விசித்தரத் தன்மையிலும் லயிக்கலாம்.

இந்த தளம் உருவான பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது. அதனை உருவாக்கியவர் அமெரிக்கப் பத்திரிகையாளரான மேக் ஜுகின். தனித்திருத்தல் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து மற்றவர்களிடம் இத்தகைய கதைகள் இருந்தால் தன்னுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டிருந்தார்.

அவரே எதிர்பாராத அளவுக்கு மற்றவர்கள் தங்கள் தனித்திருத்தல் கதைகளை இமெயிலில் பகிர்ந்துகொண்டனர். நல்ல செயலுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்துடன், இந்த தொகுப்புகளைப் படிக்க ஒரு டாலர் நன்கொடை அளிக்க வேண்டும் எனவும் ஜூகின் கேட்டிருந்தார்.

எதிர்பார்க்காத வகையில், ஆயிரக்கணக்கானோர் நன்கொடை செலுத்தி கதைகளைப் படிக்க முன்வந்தனர். அதன் பயனாக, இந்தக் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்காக ஓர் இணையதளத்தையே தொடங்கிவிட்டார். முக்கியமாக கொரோனா பாதிப்புக்கு நன்கொடை செலுத்தவும் வழிசெய்திருக்கிறார்.

இணைய முகவரி: www.thesocialdistanceproject.org

கொரோனா ஷாப்பிங் பட்டியல்

கோவிட்.ஷாப்பிங் தளத்தை அடிப்படையில் ஒரு நல்லெண்ண இணையதளம் என்று தான் சொல்ல வேண்டும். கொரோனா பாதிப்புச் சூழலில் வீட்டுத் தேவைக்கு என்ன பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டும் என பட்டியலிட உதவுகிறது. உலகின் பல நாடுகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிக்க முற்படுகின்றனர். மற்றவர்களின் நிலை பற்றி அதிகம் யோசிப்பதில்லை.

சூப்பர் மார்கெட்டுக்குச் செல்லும்போது, பயத்தின் காரணமாக அல்லாமல் தேவையின் காரணமாக எந்த பொருட்களை வாங்குவது என வழிகாட்டுவதற்காக இந்த கோவிட்.ஷாப்பிங் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களின் பட்டியலை உருவாக்கிக்கொள்ளலாம்.

மேலை நாடுகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட தளம் என்பது பட்டியலில் உள்ள பொருட்களைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். ஆனால், அதிகம் வாங்கிக் குவிப்பதும், பதுக்குவதும் எல்லோருக்கும் பொதுவானதுதானே. அதை செய்யாமல், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட வழிகாட்டுவது தளத்தின் நோக்கம் எனக் கொள்ளலாம்.

இணைய முகவரி: https://covid.shopping

வேலையிழந்தவர்களுக்குக் கைகொடுப்போம்

கோவிட் காரணத்தால் பணியிழப்பில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் வகையில் அர்ஜுன் லால் என்பவர், ஓர் இணையதளத்தை உருவாக்கியுள்ளார். பாரசூட்லிஸ்ட் என்ற அந்த தளம், கொரோனா சூழலில் வேலையிழந்தவர்களை எல்லாம் பட்டியலிடுகிறது.

வேலையிழந்தவர்களைப் பட்டியலிடுவதன் நோக்கம், இன்னமும் வேலைக்கு ஆள் எடுக்கும் வலுவான நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான ஊழியர்களை இந்த பட்டியலில் இருந்து தேர்வுசெய்துகொள்ள ஊக்குவிப்பதுதான். தேவைக்கேற்ற திறமையான நபர்களை எளிதாகத் தேடிக்கொள்ளும் வகையில் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான சூழலில் பணியை இழந்தவர்கள், புதிதாக வேலை தேடுவது எப்படி என திகைத்து நிற்கும் நிலையில், அவர்களுக்கு ஆறுதலும், ஆ வாசமும் அளிக்கக்கூடிய முயற்சியாக இந்த தளம் அமைகிறது.

இணைய முகவரி: https://parachutelist.com

மொழி கற்கலாம் வாங்க!

கொரோனாவால் விரயமாகும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றவும், பணம் சம்பாதிக்கவும் உதவும் வகையில் லாக்டவுன் லாங்குவேஜ் இணையதளம் அமைந்துள்ளது. எந்த மொழியையும் கற்க சிறந்த வழி, அந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவருடன் உரையாடி பார்ப்பது தானே. அதைத்தான் இந்த தளமும் சாத்தியமாக்குகிறது.

நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுடன் இந்த தளம் மூலம் வீடியோ உரையாடலை மேற்கொண்டு, அந்த மொழியில் பயிற்சி பெறலாம். கட்டணம் உண்டு.

வீட்டிலேயே இருக்கும் பலர் வேலையை இழந்திருக்கலாம் அல்லது வருமானம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களில் சிலர், தங்கள் மொழியைக் கற்றுத்தந்து கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பையும் உருவாக்கித் தந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பலமொழி பேசுபவர்கள் இந்த தளத்தில் தங்களைப் பட்டியலிட்டுள்ளனர்.

இணைய முகவரி: www.lockdownlanguage.org

உங்கள் கொரோனா உறுதிமொழி என்ன?

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களை பதிலளிக்கத் தூண்டும் வகையில் ‘வென்கொரோனா என்ட்ஸ்’ இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா முடிந்த பிறகு செய்ய நினைக்கும் ஐந்து விஷயங்களைப் பட்டியலிட்டு, அதை #whencoronaends என்ற ஹாஷ்டேக்குடன் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கிறது. புத்தாண்டு உறுதிமொழி போல, இதை கொரோனா கால உறுதிமொழியாக கொள்ளலாம். கொரோனா ஒவ்வொருவருக்கும் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. நீங்கள் செய்ய நினைத்ததைச் செய்யுங்கள் என்பதுதான், அதில் மிகப்பெரிய பாடம்.

இணைய முகவரி: https://whencoronaends.com

சமூகத் தொலைவின் அவசியம்

கொரோனா பரவலைத் தடுக்க, சமூகத் தொலைவின் அவசியம் தொடர்பாக, நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லவா? எளிய முறையில் இதை செய்ய சோஷியல் டிஸ்டன்சிங். ஒர்க்ஸ் இணையதளம் வழிசெய்கிறது. சமூக ஊடகங்களில், முகமூடி அணிந்த புகைப்படத்தை அறிமுக சித்திரமாக (புரொபைல் பிக்சர்)வைத்துக்கொள்வதன் மூலம் அதைச் செய்ய ஊக்குவிக்கிறது.

See Also

முகமூடி மாட்டிக்கொண்டிருக்கும் படத்தை சமூக ஊடகப் பக்கங்களில் பார்க்கும்போது, மற்றவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் அல்லவா?

சுய தனிமைப்படுத்தலை நாம் மேற்கொண்டாலும், அதை மற்றவர்கள் பார்க்கமுடியாதே. எனவேதான், சமூக ஊடகம் வாயிலாக அதை மற்றவர்கள் பார்க்கச் செய்யுங்கள் என்கிறது இந்த இணையதளம்.

இணையதள முகவரி: https://socialdistancing.works

பள்ளி மாணவர் உருவாக்கிய தளம்

கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள என்கோவ்லைவ் இணையதளத்தை நாடலாம். ஒருசில நொடிகளில் பறவைப் பார்வையாக கொரோனா பாதிப்பு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். எல்லாமே மிக அண்மை விவரங்கள் என்பது மட்டும் அல்ல, அனைத்தும் அதிகாரப்பூர்வமானவை.

முகப்புப் பக்கத்தில் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் புள்ளி விவரங்கள், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, அதில் ஏற்பட்டுள்ள அண்மை மாற்றம், உயிரிழப்புகளின் எண்ணிக்கை, மீண்டவர்கள் எண்ணிக்கை எனப் பல தகவல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த இணையதளத்தை உருவாக்கியது 17 வயது அமெரிக்கப் பள்ளி மாணவர் அவி ஸ்கிப்மன். அதைவிட ஆச்சர்யம், ஜனவரியிலேயே தளத்தை உருவாக்கியது. டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறிந்து, அது தொடர்பான நம்பகமான தகவல்களை அளிப்பதற்காக தளத்தை உருவாக்கியதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏழு வயதிலேயே புரோகிராமிங் கற்றுக்கொண்டதாக கூறியுள்ள ஸ்கிப்மன், பெரும்பாலான நுட்பங்களை கூகுள் தேடல் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இணைய முகவரி: https://ncov2019.live

கொரோனா கவலை போக்க ‘சாட்பாட்’

கொரோனா தொடர்பாக எழும் கேள்விகள், சந்தேகங்களினால் ஏற்படக்கூடிய கவலையைப் போக்கும் வகையில், பதில் அளிக்கக்கூடிய அரட்டை மென்பொருள் அறிமுகமாகியிருக்கிறது. அந்த மென்பொருளுடன் உரையாடி கொரோனா தொடர்பான சந்தேகங்களையும், அச்சங்களையும் தீர்த்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில், தான் ஒரு டாக்டர் அல்ல, உங்களின் நண்பர் மட்டுமே என்று குறிப்பிட்டு கேட்கும் கேள்விகளுக்கு நம்பகமான இடங்களில் இருந்து பதில்களை திரட்டி தருவதாகவும் தெரிவிக்கிறது.

கேள்விகளுக்கு ஏற்ப எளிதான பதில்களை விளக்கமாக அளித்து வழிகாட்டுகிறது. கொரோனா தொடர்பான செய்திகளையும், அதைவிட அதிகமாக வெளியாகும் பொய்ச் செய்திகளையும் படித்து மிரண்டுபோயிருக்கும் நபர்களுக்கு நிச்சயம் இந்த மென்பொருள் தரும் பதில்கள்
ஆறுதலாக அமையும். அதைவிட முக்கியமாக கவலையைப் போக்கும்.

இணைய முகவரி: https://coronacoa.ch

நம்மூரில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில், கொரோனா பரிசோதனை தேவையா என வழிகாட்ட ஒரு அரட்டை மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் அதனுடன் உரையாடலாம்.

இணைய முகவரி: https://covid.apollo247.com

– சைபர் சிம்மன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top